தமிழ்நாடு சட்டப்பேரவையில் பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி துணைத்தலைவராக பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியது பற்றி முடிவெடுக்க வலியுறுத்தி வருகின்றனர். 


தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்.எல்.ஏக்களை அமைதிகாக்கும் படி கூறியபோது, ”மைக் கொடுங்க” என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கேட்டார். அப்போது மைக்கெல்லாம் தரமுடியாது என சபாநாயகர் அப்பாவு பதில் கொடுத்து, கேள்வி நேரத்தில் இப்படி பிரச்சனை எழுப்பி அவையின் மாண்பை கெடுக்காதீர்கள். நான் இதை அனுமதிக்க மாட்டேன். 


”எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கலகம் பண்ண வந்த மாதிரி தெரியுது. ஏதோ நோக்கத்தோட நீங்க வந்துருக்கீங்க. இத நான் அனுமதிக்க மாட்டேன். கலைஞர் பட்ஜெட் படித்தபோது அதை பிடுங்கி கிழித்துபோட்டது மாதிரி செய்கின்றீர்கள்” என பேசினார். 


தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.






அதன்பிறகு பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. எதிர்கட்சி துணை தலைவர் பதவி என்பது அந்தந்த கட்சி கொடுப்பது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மற்ற பதவிகள் மற்ற நபர்களை திருப்திப்படுத்தவே கட்சிகளால் வழங்கப்படுகின்றனர். அதற்கு சட்டமன்றத்தில் அங்கீகாரம் கிடையாது. சட்டமன்ற அலுவல் குழுவில் யாரை நியமிக்க வேண்டும், நியமிக்க கூடாது என்பதை நீங்கள் சொல்ல முடியாது. அது அவை தலைவர் எடுக்க வேண்டிய முடிவு.






பழனிசாமி, பன்னீர்செல்வம் அளித்த கோரிக்கைகள் எனது ஆய்வில் இருந்து வருகிறது. விரைவில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் தவறாக நடந்துகொள்ள யாரும் எனக்கு அறிவுரை தரவில்லை. இந்த இடத்தில் குறிப்பிட்ட நபரை அமரவைக்கக்கூடாது என குறிப்பிட யாருக்கும் உரிமையில்லை.” என்று தெரிவித்தார்.