பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, கல்விக் கொள்கையில், மத்திய அரசின் நிலைப்பாட்டால் இந்தத் தொல்லைகள் எல்லாம் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாளை தொடங்குவதாக இருந்த பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 நாட்களுக்குப் பிறகு கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்களைத் தடுக்கவும் மாணவர்களுக்கு ஏற்படும் வீண் சிரமத்தைத் தடுக்கவும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது:
’பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்காக மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் தாமதமாக வந்தன. அதனால் விண்ணப்பிக்கக் கால அவகாசத்தைக் கால வரையறை இன்றி நீட்டித்து, தேர்வு முடிவுகள் வெளியாகி மேலும் 5 நாட்கள் அவகாசம் அளித்திருந்தோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி இடங்கள்
இப்போதும் நீட் தேர்வு முடிவுகள் 21ஆம் தேதியே வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் வெளியாகாமல், காலதாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டு மீண்டும் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் செல்லக்கூடிய நிலை ஏற்படும். ’கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டால் இந்தத் தொல்லைகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன. இதனால் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுகிறது. பணத்தைக் கட்டி, மாணவர்கள் அல்லல்படக் கூடாது என்று மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கலந்தாய்வுத் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு, பின்னர் அறிவிக்கப்படும்.
கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்
கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால், கூடுதல் இடங்களை அதிகரிக்க தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மற்ற நாடுகளின் கல்வியோடு சேர்த்து நம்முடைய உயர் கல்வியைப் பயில வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது’’.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு சிறப்புக் கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெற்றது.
பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு
இதற்கிடையே நாளை (ஆகஸ்ட் 25ஆம் தேதி) முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாததால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.