தஞ்சாவூர்: உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் தமிழ்நாடு உயர் கல்வியில் இருப்பதற்கு கருணாநிதியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும்தான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாமில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டார். இம்முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்). துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்ததாவது: நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. 5 வங்கிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர். 155 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்தனர். இம்முகாமில் 185 பேருக்கு ரூ. 7 கோடியே 90 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
உயர்கல்வி ஊக்கப்படுத்திட இதுபோன்ற வங்கிக் கடனுதவி முகாம்கள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு வங்கிக் கடனுதவிகளை திருப்பி செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) சங்கர நாராயணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டலத்தின் முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், முன்னோடி வங்கிகள் மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இது திடீரென ஏற்பட்ட வளர்ச்சி அல்ல, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 35 ஆண்டு கால முயற்சியால் நிகழ்ந்தது. கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரியாக இருந்தால் 5 மதிப்பெண்களை அரசே வழங்குவது போன்றவற்றை செயல்படுத்தினார்.
இதன் மூலம் தற்போது உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் தமிழ்நாடு உயர் கல்வியில் இருப்பதற்கு கருணாநிதியும், தமிழக முதல்வர் ஸ்டாலினும்தான் காரணம். கல்விக் கடன் பெறுவதில் 18 வயது நிரம்பாதவர்களுக்கு யாராவது ஒருவர் உத்தரவாத கையொப்பம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த நடைமுறை 18 வயது நிரம்பியவர்களுக்கும் உத்தரவாத கையொப்பம் கையெழுத்திடும் நிலை உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் முழு மனிதன் என்பதால், இந்த உத்தரவாத கையொப்பம் தேவை என்பது எந்த வகையில் நியாயம் என்றும், முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்தை, கோரிக்கையாக ஏற்று தமிழக முதல்வருக்கும், நிதித் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதைச் செயல்படுத்தும்போது உயர் கல்வித் துறை இன்னும் மேன்மை அடைவதற்கு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.