உயர் கல்வித்துறை பங்களிப்போர்‌ கலந்தாய்வுக்‌ கூட்டம்‌ உயர் கல்வித்துறை அமைச்சர்‌‌ கோவி.செழியன்‌ தலைமையில்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ கோவி.செழியன்‌ தெரிவித்ததாவது:-


''தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின்‌ திட்டங்கள்‌ முறையாகச் செயல்படுத்தப்பட்டு மாணவர்களின்‌ கல்வித்‌ திறனை மேலும்‌ மேன்மை அடையச்‌ செய்திடும்‌ வழியில்‌ உயர்கல்வித்துறை பங்களிப்பாளர்களை நேரடியாகச்‌ சந்தித்து அவர்களின்‌ கருத்தினைப்‌ பெற்றுச்‌ செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்‌ அறிவுறுத்தியுள்ளார்‌.


உயர்கல்வித்‌ துறை பங்களிப்‌போர்‌ கூட்டம்‌


அதன்படி, உயர்கல்வித்‌ துறை பங்களிப்‌போர்‌ கூட்டம்‌ திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ மதுரை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகங்களில்‌ மண்டலங்கள்‌ வாரியாக நடத்தப்பட்டன. அதன்‌ தொடர்ச்சியாக சென்னை மண்டலத்திற்குட்பட்ட உயர்கல்வித்‌ துறை பங்களிப்போர்‌ கலந்தாய்வின்‌ நான்காவது கூட்டம்‌ சென்னைப்‌ பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில்‌ நடைபெறுகின்றது.


7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நீட்‌ தேர்வினால்‌ நமது கிராமப்புற மாணவர்கள்‌ தங்களது உயர்‌ கல்வியினைப்‌ பெற இயலாத நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு முந்தைய அரசால்‌ மருத்துவ மாணவர்களுக்கு மட்டும்‌ அறிவிக்கப்பட்டது. இதனால்‌ இட ஒதுக்கீடு பெற்ற ஒரு மாணவி இந்த இட ஒதுக்கீட்டினால்‌ படிக்க இடம்‌ கிடைத்தும்‌ போதிய வசதி இல்லாததால்‌ மருத்துவப்‌ படிப்பைத்‌ தொடர இயலவில்லை எனத்‌ தெரிவித்தார். அப்போதைய எதிர்க்கட்சித்‌ தலைவரும்‌ தற்போதைய முதலமைச்சருமான நமது முதலமைச்சர்‌ அவர்கள்‌, அந்த மாணவியின்‌ முழுக்‌ கல்விச்‌ செலவையும்‌ தானே ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். 


பொறியியல்‌ கல்விக்கு மட்டும்‌ ரூ.213 கோடி


பின்னர்‌ தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்‌ பொறுப்பேற்றவுடன்‌ மருத்துவப்‌ படிப்பு மட்டுமல்லாமல்‌ பள்ளிப்படிப்பை முடித்து பொறியியல்‌, விவசாயம்‌, சட்டம்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பட்டப்‌ படிப்பிலும்‌ 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினைக்‌ கொண்டு வந்ததுடன்‌, இந்த இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ உயர்கல்வியில்‌ சேர்க்கை பெறும்‌ மாணவர்களுக்குக்‌ கல்விக்‌ கட்டணம்‌, விடுதிக்‌ கட்டணம்‌, பேருந்து கட்டணம்‌ உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும்‌ அரசே ஏற்கும்‌ என அறிவித்து, அதற்காகப்‌ பொறியியல்‌ கல்விக்கு மட்டும்‌ ரூ.213 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்‌.


நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி


"நான்‌ முதல்வன்‌" என்ற முத்தான திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை 27 இலட்சம்‌ மாணாக்கர்களுக்குத்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில்‌ சுமார்‌ 1 இலட்சத்திற்கும்‌ மேற்பட்டோர்‌ தற்போது முக்கிய நிறுவனங்களில்‌ பணி வாய்ப்புகள்‌ பெற்றுப்‌ பணிபுரிந்து வருகின்றனர்‌.


புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌  7 இலட்சம்‌ பயனாளிகள்


புதுமைப்‌ பெண்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சுமார்‌ 7 இலட்சம்‌ மாணவிகள்‌ பயனடைந்து வருகின்றனர்‌. அதேபோல்‌ இவ்வாண்டு தொடங்கப்பட்ட தமிழ்ப்புதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ சுமார்‌ 2 லட்சம்‌ மாணவர்கள்‌ பயனடைந்து வருகின்றனர்‌. ஒன்றிய அரசுப்‌ பணியாளர் தேர்வாணையம்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ போன்ற தேர்வாணையங்களால்‌ நடத்தப்படும்‌ தேர்வுகளுக்கு மாணவர்களைத்‌ தயார்‌ செய்ய துணை முதலமைச்சரால்‌ போட்டித்தேர்வு பயிற்சி மையம்‌ மதுரையில்‌ தொடங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும்‌ தொடங்கப்படவுள்ளது. இதனை மாணாக்கர்கள்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌.


ஆசிரியர்கள்‌, ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள்‌, கல்லூரிகளின்‌ தாளாளர்கள்‌, செயலாளர்கள்‌, முதல்வர்கள்‌ இந்தக்‌ கலந்தாய்வுக்கு வருகைதந்து தங்களது அரிய கருத்துகளைத்‌ தெரிவிக்க வேண்டும்‌. மேலும்‌, உயர்கல்வி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினைத்‌ தருகின்ற தொழில்‌ நிறுவனங்கள்‌ சார்ந்த நிறுவனத் தலைவர்கள்‌, மேலாண்மை ஆயக்குநர்கள்‌, செயல்‌ தலைவர்கள்‌ எந்த மாதிரியான தகுதியுடைய மாணவர்களை எதிர்பார்க்கின்றார்கள்‌ என்ற கருத்தையும்‌, மாற்றுத்திறனாளிகள்‌ உயர்கல்வி பெறுவதில்‌ என்னென்ன இடர்பாடுகள்‌ இருக்கின்றன, அவற்றை களைவதற்கு என்னென்ன நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டும்‌ என்பது குறித்தும்‌ கேட்டறியப்படவுள்ளது.


இங்கு வழங்கப்பட்ட கருத்துகள்‌ அனைத்தும்‌ உரிய பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு தேவைகேற்ப ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்‌''.


இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.