சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனை தான் தவறாக நினைக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 சங்கங்கள் ஒரு வாரமாக போராட்டம் நடத்தினர். இதில் 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும் என்றும்,  2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்து ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி அளிக்க வேண்டும் என்றும் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. 


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.  திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. கிட்டதட்ட ஒரு வாரம் நடந்த இந்த போராட்ட சம்பவத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. 


பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, கோரிக்கைகளை ஆய்வு செய்ய மூவர் குழு” உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரிய சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 5 ஆம் தேதி அனைத்து ஆசிரியர்களையும் போலீசார் அதிகாலையில் அதிரடியாக கைது செய்தனர். கைது சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 


இப்படியான நிலையில் திடீரென அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.  அனைத்து சங்கங்களும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இப்படியான நிலையில், திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அவர், “போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருப்பதாக நினைக்கிறேன். அவரின் போராட்டத்தை தவறாக நினைக்கவில்லை. ஆசிரியர்கள் தங்கள் உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.


மேலும் ஆசிரியர்கள் - பள்ளிக் கல்வித்துறை இடையே உள்ளே புகுந்து பிரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் - தம்பிதான் என்பது போல எங்கள் உறவு உள்ளது.  போராட்டங்கள் மூலம் பல்வேறு விமர்சனத்தை முன் வைத்தாலும் ஆசிரியர்களுக்கு தேவையானவற்றை திமுக அரசு செய்யும்” என அன்பில் மகேஸ் கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறையின் 53 திட்டங்களையும் செயல்படுத்த ஆசிரியர்கள்தான் காரணம் எனவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.