பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 56 கனவு ஆசிரியர்களுடன் இணைந்து ஈஃபிள் கோபுரத்தைப் பார்வையிட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


கனவு ஆசிரியர் விருது


எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுள் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் ‘கனவு ஆசிரியர் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.


ஆன்லைன் தேர்வு மூலம் இந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு


2024- 25ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் தேர்வில் 10,305 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்வின் மூலம் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்ணுடன், 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 பேர் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


ஃபிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 54 ஆசிரியர்கள்


இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 54 ஆசிரியர்கள் அக்.23ம் தேதி அன்று ஃபிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். 28ம் தேதி வரை சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் உடன் சென்றுள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்று, 1889-ல் நூறு ஆண்டுகள் ஆகியிருந்தன. அந்த நூற்றாண்டைக் கொண்டாட பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டதுதான் ஈஃபிள் கோபுரம். உலகம் போற்றும் இந்த இரும்புக் கோபுரத்தை "கனவு ஆசிரியர்" பெருமக்களோடு இணைந்து பார்வையிட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.  இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.






6 நாடுகளுக்கு 236 மாணவர்கள் கல்வி சுற்றுலா


முன்னதாக, தமிழ்நாடு அரசு இதுவரை 6 நாடுகளுக்கு 236 மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.