2 நாற்காலி, ஒரு மைக் இருந்தால் போதுமா,? என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாமா என்று சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.


பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் பேர் ஆப்சென்ட் ஆன விவகாரத்தில் சட்டப்பேரவையில் அதிமுக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி இருந்தார். 


இதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 


 “பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் எனது கடமையல்ல. பன்னிரெண்டாம் வகுப்பில் 50 ஆயிரம் மாணவர்கள் ஏன் பங்கேற்காமல் போனார்கள் என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இதே நாளில்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை மட்டுமல்ல மற்ற எல்லாத் துறைகளையும் கொரோனா காலம் மாற்றிப்போட்டது. இவை அனைத்தையும்தான் கணக்கில் எடுக்க வேண்டும். கொரோனாவுக்கு முன்பும் பின்பும் என்ன மாற்றத்தைக் கண்டு வருகிறோம் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். 


எப்படியெல்லாம் திரித்து பேசப்படுகிறது?


முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சொன்னது போல பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஒரு செய்தி எப்படியெல்லாம் திரித்து பேசப்படுகிறது? பள்ளிக்கு 3 நாட்கள் வந்துவிட்டால் போதும் என்று அமைச்சர் சொல்லிவிட்டார் என்று ஒரு செய்தி. அந்த செய்திக்கு ஒவ்வொருவரும் தனித்தனியாக விவாதங்கள் நடத்துகிறார்கள். அது தொலைக்காட்சி விவாதமாக இருந்தாலும் சரி, பத்திரிகை செய்தியாக இருந்தாலும் சரி. இரண்டு நாற்காலிகள், ஒரு மைக் இருந்தால் போதும். ஒரு மணி நேரம் பேசுகிறார்கள். 


இது அப்படி சொல்லப்பட்ட செய்தி அல்ல என்பது குறித்த விளக்கத்தை நான் தருவதற்கு முன்பாக இந்த செய்தி எப்படி இப்படி வந்தது? இதுபோல் நாங்கள் சொல்லவில்லையே என திருத்திச் சொல்லும்போது, அடுத்த நாளே ஒரு பத்திரிக்கை தலைப்புச் செய்தியில் போடுகிறார்கள்... அமைச்சர் அந்தர் பல்டி என்று. 


பத்திரிகையின் தலைப்புச் செய்தி என்பது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விழிகளைப் பிடுங்கி எறிவதாக இருக்கக்கூடாது. பகுத்தறிந்து பார்த்து வரும் செய்தியாக இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பதற்றங்களை உருவாக்கக்கூடிய செய்தியாக இருக்கக்கூடாது. இந்த வேண்டுகோளை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் குறிப்பாக ஒரு பத்திரிகைக்கு வைக்கிறேன்.


இங்கே பேசுகின்ற உறுப்பினர்கள்‌ பலர்‌ பல செய்திகளில்‌, பல தலையங்கங்களில்‌ சொல்லலாம்‌, ஏறத்தாழ 1,90,000 இடைநிற்றல்‌ மாணவர்களை பள்ளியில்‌ சேர்த்தீர்களே; என்ன ஆயிற்று? அவர்கள்‌ என்னவானார்கள்‌ என்று. அதற்கான விளக்கமாக, அதுபோன்று சேர்த்த சுமார்‌ 1,25,000 மாணவர்களில்‌ 78,000 மாணவர்களை நாங்கள்‌ இன்றைக்குத்‌ தேர்வு எழுத வைத்திருக்கிறோம்‌. இதை அப்படியே விட்டுவிட்டிருந்தோம்‌ என்றால்‌ அந்த 1,90,000
மாணவர்களும்‌ இன்றைக்குப்‌ பள்ளிக்கே வராமல்‌ போயிருப்பார்கள்''.


இவ்வாறு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.