சென்னை, கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் அனைவருக்கும் ஐஐடிஎம் என்ற திட்டத்தின் கீழ் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்த 45 அரசு மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநர் காமகோடி, பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்த குமார், செயலர் காகர்லா உஷா, ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஐஐடியில் இந்த திட்டம் முதன் முதலாக அறிமுகபடுத்தப்பட்டது. அதன்படி ’அனைவருக்கும் ஐஐடிஎம்’ என்ற பெயரில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட 192 மாணவர்களுக்கு ஐஐடியில் 14 வாரங்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிஎஸ்சி பட்ட படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வை எழுதினர்.

 

இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவிகிதம் கல்வி உதவித்தொகையை சென்னை ஐஐடி வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 87 மாணவ-மாணவிகளுக்கு சென்னை ஐஐடியில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. அவர்களில் 45 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆணைகளை வழங்கினார்.

 

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ’’இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று மேலும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு இது உதவியாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி. இது போன்ற மேலும் அறிவிப்புகள் உங்களிடமிருந்து வரும்போது அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்’’ என கூறினார்.

 

ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், ’’87 மாணவர்கள் என்பது வெறும் 33 சதவிகிதம் தான். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். நான்  இயக்குனராக பொறுப்பேற்றதற்கு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு இது. இது சாதாரண படிப்பு கிடையாது. இதில் பயிற்சி எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மேலும் வெற்றி அடைவார்கள். இன்னும் 10 வருடத்தில் டேட்டா சயின்ஸில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படும். தற்போது பிஎஸ்சி படிப்பிற்கு தகுதி பெற்ற மாணவ- மாணவிகள் அனைவரும் உங்களுக்கு பின்னால் வரும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களையும் இதுபோன்ற படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவியுங்கள்’’ என்று கூறினார்.