இந்த ஆண்டின் ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய குறும்படம் ஒன்றை வெளியிட்டு, ஆசிரியர் தினத்தைச் சிறப்பித்திருப்பதோடு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாலமாகத் தன்னை முன்னிறுத்தியுள்ளது. ‘லட்டு கா கோஜ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தின் தலைப்பின் பொருள், ‘லட்டுவின் கண்டுபிடிப்பு’. இந்தக் குறும்படம் ஆசிரியர்களின் சமூகத் தேவையும், மாணவர்கள் சமூகத்தில் வளர மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்திட்டத்தையும் குறித்து பேசுகிறது.
கடந்த ஆண்டு முதல், உலகம் முழுவதும் கல்விக்கான வழக்கமான பணிகள் கொரோனா பெருந்தொற்றாலும், ஊரடங்காலும் தடைபட்டு நிற்கின்றன. எனினும், உலகம் முழுவதும் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற வரை புதிய வழிமுறைகளில் மாணவர்களைச் சென்றடைந்து, கற்றலைத் தடையின்றி கொண்டு சென்று வருகின்றனர். இந்தப் புதிய வழிமுறைகளில் ஒன்றாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் குறும்படம் மற்றொரு தொழில்நுட்ப வழிமுறையை அறிமுகம் செய்கிறது.
லட்டு என்ற சிறுவன் அதீத ஆர்வம் கொண்டவன். தனது கேள்விகளுக்கு விடை கிடைப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய சிறுவன் லட்டுவுக்கு, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். இறுதியில், அவனது ஆசிரியரும், மைக்ரோசாப்ட் தொழில்நுட்பமும் அவனுக்கு இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள உதவுகிறார்கள். இந்தக் குறும்படம் ஆசிரியர்கள் எப்படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகளின் கற்றலைச் சிறப்பாக மாற்றுகிறார்கள், எப்படி கற்றல் தடைபடாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறது. மேலும் இந்தக் குறும்படத்தின் மூலம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் தேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பம் இணைக்கிறது என்றும் பேசுகிறது.
மைக்ரோசாப்ட் இந்தியாவின் ட்விட்டர், பேஸ்புக், LinkedIn, இன்ஸ்டாகிராம், யூட்யூப் ஆகிய தளங்களில் இந்தக் குறும்படம் வெளியாகியுள்ளது. இதில் ஆங்கில சப்டைட்டில்களும், ஆடியோ விவரணை உதவியும் சேர்க்கப்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைமை விளம்பரப் பிரிவு அதிகாரி ஹிது சாவ்லா இந்தக் குறும்படம் குறித்து, “இந்தப் பெருந்தொற்று அனைவரின் பணியையும் மாற்றியமைத்திருக்கிறது. குறிப்பாக, ஆசிரியர்களின் பணி முழுவதுமாக மாறியுள்ளது. கற்றல் தடைபடாமல் நிகழவும், அனைவரும் கல்வி கற்கவும், வகுப்பில் கவனத்தோடு இருக்கவும் கடும் முயற்சிகளை ஆசிரியர்கள் எடுத்து வருகின்றனர். தரமான கல்வியை அளிப்பதற்காக ஆசிரியர்கள் சந்தித்து வரும் சவால்களால், இந்த ஆண்டின் ஆசிரியர் தினம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியா முழுவதும் அர்ப்பணிப்போடு பணியாற்றி, தங்கள் மாணவர்களை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்து, அவர்களுக்கு கற்றல் குறித்த ஆர்வத்தைத் தூண்ட உதவிய ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தக் குறும்படத்தை வெளியிட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனப் பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் முதலான அனைவரையும் உள்ளடக்கிய digitial classroom என்ற அம்சத்திற்குத் தேவையான சாப்ட்வேர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.