தனது தாயார் சொன்ன ஒரே ஒரு அறிவுரையைக் கடைபிடித்ததால் இளம் பெண் ஒருவர் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 


அனுஜ் மாலிக்கின் வெற்றிக்கதை:


அனுஜ் மாலிக் டெல்லியைச் சேர்ந்தவர் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அவரது வெற்றி முதல் முயற்சியிலேயே கிடைத்த வெற்றி. ஐஏஎஸ் தேர்வில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால், கடின உழைப்பு, பாடத்தின் மீதான புரிதல் இருந்தால் தேர்வு கைவசப்படும். இதற்கு எடுத்துக்காட்டு அனுஜ் மாலிக்.
டெல்லி லஜ்பத் நகரைச் சேர்ந்த அனுஜ் தனது பள்ளிப்படிப்பை ஏர் ஃபோர்ஸ் பால் பார்தி பள்ளியில் முடித்தார். பின்னர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் பொறியியல் முடித்து பிடெக்கும் பயின்றார்.




ஆனால் தனது யுபிஎஸ்சி பயிற்சியை பொறியியல் படிப்பை முடித்தவுடனேயே ஆரம்பித்துவிட்டார். 2015 ஆம் ஆண்டு அவர் பொறியியல் படிப்பை முடித்தார். அதன் பின்னர் ஓராண்டு அவர் வீட்டிலிருந்தே படித்தார்.


அப்போது தான அவரது அம்மாவின் உதவிக்கரம் அவருக்குக் கிடைத்தது. யுபிஎஸ்சி தேர்வில் முதல்நிலைத் தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் என மூன்று படிநிலைகள் உள்ளன. இவற்றில் அனுஜ் மாலிக் மெயின்ஸ் தேர்வுக்கு எந்தப் பாடத்தைத் தேர்வு செய்வது என்பதில் மிகவும் குழப்பத்தில் இருந்துள்ளார். அவருக்கு சைக்காலஜி அதாவது உளவியல் பாடத்தின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால் பொறியியல் பட்டதாரியான அவருக்கு உளவியல் பாடப்பிரிவு புதிது. அப்போது அவரது தாயார் அனுஜுக்கு அறிவுரை வழங்கினார். உனக்கு உளவியல் பாடத்தின் மீது ஆர்வம் இருந்தால் மறுயோசனை இல்லாமல் முன்னேறிச் செல். ஏனெனில் தேர்வை எழுதப்போவது நீ தானே. ஆகையால் அடுத்தவரின் தலையீட்டுக்கு அனுமதிக்காதே. உனக்குப் பிடித்த உளவியல் பாடப்பிரிவையே எடுத்துப் படி வேறு பாடத்துக்கு மாறாதே என்று கூறியுள்ளார்.


அவரது தாயாரின் அறிவுரையை ஏற்ற அனுஜ் மாலிக் உளவியல் பாடத்தைத் தேர்வு செய்து மிகக் கடினமாக தயாரானார். அதன் காரணமாக 2016 ஆம் நடந்த தேர்வை எதிர்கொண்ட அவர் அகில இந்திய அளவில் 16வது இடத்தைப் பெற்றார்.


அதுவும் முதல் முயற்சியிலேயே அந்த இலக்கை அவர் அடைந்தார்.


அனுஜ் மாலிக்கின் தாயார் மற்றும் தந்தை அரசு உத்தியோகத்தில் உள்ளனர். தந்தை டிடிஏ எனப்படும் டெல்லி வளர்ச்சிக் குழுமத்தில் பணியாற்றுகிறார். தாயார் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனில் பணிபுரிகிறார். அனுஜ் மாலிக்கின் கணவர் கவுரவ் சிங் சோகர்வாலும் ஓர் ஐஏஎஸ் அதிகாரியே. அவர் கோரக்பூரில் அதிகாரியாக உள்ளார்.


ஊரடங்கில் கவனம் பெற்ற அதிகாரி:


அனுஜ் மாலிக் கரோனா முதல் ஊரடங்கின் போது ஊடகக் கவனம் பெற்றார். அவர் உத்தரப் பிரதேசத்தின் காஜ்னியில் இணை ஆட்சியராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டனர். அப்போது அனுஜ் தனது சொந்தச் செலவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காலணி வாங்கிக் கொடுத்து கவனம் பெற்றார்.