மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் சர்ஃபராஸ், 2024ஆம் ஆண்டு நீட் தேர்வில் 720-க்கு 677 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஏராளமான பொருளாதார சோதனைகளைக் கடந்து இந்த வெற்றியை சர்ஃபராஸ் பெற்றுள்ளார்.
சாதித்தது எப்படி?
சர்ஃபராஸ் அடிப்படையில் என்டிஏ தேர்வில் தேர்ச்சி பெற ஆசைப்பட்டவர். ஆனால் தேர்வுக்கு முன்னதாக, விபத்தில் சிக்கியதால் அந்தக் கனவு அடியோடு தகர்ந்தது.
சர்ஃபராஸ் குறித்த வீடியோவை பிசிக்ஸ் வாலா நிறுவனர் ஆலக் பாண்டே பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், ‘’வறுமை சமத்துவமின்மையை ஏற்படுத்துகிறது. ஒரு மாணவன், நகரத்தில் ஏசி அறையில் படிக்கிறார். இன்னொரு மாணவர் வறுமையில் வேலைக்குச் சென்றுகொண்டே படிக்கிறார்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ, இணையத்தில் 5.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 505 கே லைக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக தினந்தோறும் 400 செங்கற்களைச் சுமந்து வேலை பார்த்துள்ளார் சர்ஃபராஸ். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வேலை பார்த்துவிட்டு, பிறகு படித்துள்ளார்.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இடம்
கடைசியாக அவருக்கு, கொல்கத்தாவில் உள்ள நில் ரத்தன் சிர்கார் மருத்துவக் கல்லூரியில் தற்போது மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அவருக்கு அலாக் பாண்டே படிக்க ரூ.5 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். புதிதாக ஒரு செல் போனும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சர்ஃபராஸ் குடும்பம் ஏழ்மையானது. பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டில் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சர்ஃபராஸ் குறித்து அவரின் அம்மா கூறும்போது, ’’முன்பெல்லாம் வீட்டுக்கு கூரையே இருக்காது. சர்ஃபராஸ்-க்கு சளி பிடித்து விடக்கூடாது என்பதற்காக, இரவு முழுவதும் அவனுடன் அமர்ந்திருப்பேன்’’ என்கிறார்.
விடா முயற்சியால் நீட் தேர்வில் வெற்றி பெற்ற சர்ஃபராஸ் குறித்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.