மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் 2020 பேட்ச் மாணவர்களை எழுத வைக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. 


நெக்ஸ்ட் தேர்வு என்றால் என்ன?


நெக்ஸ்ட் தேர்வு வழிமுறைகள் குறித்த அறிவிக்கையை அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டது. இதில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு, பொது தகுதித் தேர்வாக நெக்ஸ்ட் தேர்வு (National Exit Test NExT) நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. 


3 பிரிவினருக்கு நெக்ஸ்ட் தேர்வு கட்டாயம்


நெக்ஸ்ட் தேர்வு 3 வகைகளில் பயன்படுத்தப்பட உள்ளது. இதன்படி, 


* நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மெரிட் அடிப்படையில் முதுநிலை மருத்துவம் படிக்க முடியும். 
* அதேபோல மருத்துவத் தொழில் செய்யப் பதிவு செய்ய முடியும். 
* மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் இந்தியாவில் பதிவு செய்ய முடியும்.


இறுதித் தேர்வாக இருக்காது


முன்னதாக மத்திய அமைச்சர்  மன்சுக் மாண்டவியா நெக்ஸ்ட் தேர்வு குறித்துப் பேசும்போது, 2019 பேட்ச் எம்பிபிஸ் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டியதில்லை. 2020 பேட்ச் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டி இருக்கும். மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் மத்திய அரசோ, தேசிய மருத்துவ ஆணையமோ எடுக்காது.  அதேபோல நெக்ஸ்ட் தேர்வு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான இறுதித் தேர்வாக இருக்காது. 


மருத்துவம் முடித்த மாணவர்களுக்குப் பட்டம் வழங்கப்படும். ஆனால் பட்டம் பெற்ற பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருந்தார்.


தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை


இந்த நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை 2025 ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும் 2020 பேட்ச் மாணவர்களை எழுத வைக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. 


இதுகுறித்து அமைச்சக மூத்த அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:


’’2023 ஜூன் மாதம் வெளியான நெக்ஸ்ட் தேர்வுக்கான வழிமுறைகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு படிநிலை 1 ( NExT Step 1) மற்றும் படிநிலை 2  ( NExT Step 2) என இரண்டு கட்டங்களாக 12 மாதங்களுக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஆகஸ்ட் 2025-ல் முதல் படிநிலை நெக்ஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு தியரி அடிப்படையில் அமைந்திருக்கும். அடுத்து 2026 பிப்ரவரியில் 2ஆம் நெக்ஸ்ட் தேர்வு நடைபெற உள்ளது. முதல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்புவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.


நாடு முழுவதும் 2020 பேட்ச்சில் சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் எம்பிபிஎஸ் சேர்ந்து படித்து வருகின்றனர். சுகாதார அமைச்சகத்தின் தகவல் அறிக்கைப்படி, 2025 ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள நெக்ஸ்ட் தேர்வை 62 ஆயிரம் மாணவர்கள் எழுதத் தகுதி பெற்றுள்ளனர். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 


இதைத் தொடர்ந்து முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும்’’. 


இவ்வாறு சுகாதார அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.