12ஆம் வகுப்பை முடித்து மாணவர்கள் உயர் கல்வியில் சேரும் காலம் இது. ஒரு மாணவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்வதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் போக்கை இந்த காலகட்டத்தில்தான் பெரும்பாலும் தீர்மானிக்கிறார்.
இந்த நிலையில், மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மைப் படிப்புகள், கால்நடை மருத்துவம், பாலிடெக்னிக் படிப்புகள், கலை, அறிவியல் படிப்புகள், அரசு தொழில்பயிற்சி படிப்புகள் ஆகியவற்றுக்கு எப்போது விண்ணப்பப் பதிவு தொடங்கியது? இறுதி நாள் எப்போது? அதற்கான இணையதளம் என்ன? என்பவை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மருத்துவப் படிப்புகள்
நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் அதே நேரத்தில்தான் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. பொதுவாக ஜூன் மாதம் முதல் ஜூலை வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும். https://www.tanuvas.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகள்
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியான நிலையில், அன்றே பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
விரிவாக வாசிக்க: TNEA 2024: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
வேளாண் படிப்புகள்
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அடுத்தபடியாக வேளாண் படிப்புகள் அதிகம் மதிப்பு மிக்கவையாகக் கருதப்படுகின்றன. இந்த முறை வேளாண் படிப்புகளோடு மீன்வளப் படிப்புகளுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதற்கு மே 7ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் https://tnagfi.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ என்ற இணைப்பை க்ளிக் செய்து, இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
சட்டப் படிப்புகள்
ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னதாக மே 10ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கலை, அறிவியல் படிப்புகள்
கலை, அறிவியல் படிப்புகளுக்கு அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஏற்கெனவே விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று முடிந்துவிட்டது. தனியார் கல்லூரிகளில் வேண்டுமானால், பல்வேறு கலை, அறிவியல் படிப்புகளில் தற்போது சேர்ந்து படிக்கலாம்.
பாலிடெக்னிக் படிப்புகள்
2024- 25ஆம் ஆண்டிற்கான பாலிடெக்னிக் எனப்படும் பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 31 கடைசித் தேதி என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மே 10 முதல் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். https://www.tnpoly.in/என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஐடிஐ படிப்புகள்
ஐடிஐ எனப்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையப் படிப்புகளுக்கும் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் 2024- 2025ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 10 முதல் விண்ணப்பித்த நிலையில், கடைசித் தேதி 07.06. 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை https://www.skilltraining.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து வாசிக்க: ITI Admission: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; ஐடிஐ சேர்க்கைக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்: எப்படி?