மருத்துவக் குறியீடு என்பது மருத்துவ அறிக்கைகளை மருத்துவத்துறைக்கு ஏற்றவாறான குறியீடுகளாக மாற்றும் பணியாகும். இதன்மூலம், கடினமான மருத்துவ அறிக்கைகளை எளிதான, வசதியான குறியீடுகளாக மாற்றிக் கொள்ள முடியும். 


மருத்துவர்கள் தரும் அறிக்கைகளை மருத்துவக் குறியீடுகளாக மாற்றும் பொறுப்பு மருத்துவக் குறியீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மருத்துவக் குறியீட்டாளர்கள் மருத்துவத் துறையின் பின்னணியில் பணியாற்றி, நோயாளிகளின் தகவல்களை நேர்த்தியாக கணினிக்கு ஏற்றவாறு குறியீடுகளாக மாற்றும் நிபுணர்கள் ஆவர். 



ஒரு மருத்துவர் நோயாளியைப் பரிசோதித்து, அவருக்குச் சிகிச்சை அளிக்கும் போது, காப்பீடு நிறுவனங்கள் நோயாளிக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொண்டால் மட்டுமே, அவருடைய மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியும். காப்பீட்டு நிறுவனங்களுக்கு எளிய மொழியில் விவரங்கள் அளிப்பது என்பது சிரமம் என்பதால், துல்லியமான தகவல்களை மருத்துவச் சொற்களுக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தி சொல்ல முடியும். இந்தப் பணியைத் திறம்பட செய்து முடிப்பவரே மருத்துவக் குறியீட்டாளர். மருத்துவக் குறியீடுகளைப் பயன்படுத்தி ஒரு நோயாளியின் நிலை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அதனை அவர் உடல் எவ்வாறு எதிர்கொண்டது முதலான சிக்கலான விவகாரங்களை எளிய முறையில் ஆவணப்படுத்த முடியும். 


2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு, மருத்துவத் துறைக்கான தேவை அதிகரித்தது, மேலும், மருத்துவத் துறையின் பல்வேறு துணைத் துறைகளில் ஆள் பற்றாக்குறை முதலியவை தெரிய வந்தது. மேலும் இந்தியாவின் மருத்துவத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் 80 சதவிகித மருத்துவ வர்த்தகப் பணி இந்தியாவுக்கு அளிக்கப்படுகிறது. எனவே மருத்துவக் குறியீட்டாளர்களுக்கான தேவை வளர்ந்து வருகிறது. 


மருத்துவக் குறியீட்டாளர் ஆவது எப்படி?



மருத்துவக் குறியீட்டாளர் ஆகப் பணியாற்றுவதற்கு, உயிரியல் தொடர்பான பின்னணியைக் கொண்ட படிப்புகளில் இளங்கலைப் பட்டமோ, முதுகலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும். மேலும், மருத்துவ அறிக்கைகளைப் படித்து, புரிந்துகொள்ளும் பகுப்பாய்வு செய்துகொள்ளும் திறன் பெற்றிருக்க வேண்டும். இவற்றோடு கட்டணம் செலுவதற்கான சரியான குறியீடுகளையும், நோயாளிகளின் விவரங்களையும் குறித்துக் கொள்வதற்கான திறனையும் பெற வேண்டும். 


டெல்லியில் உள்ள Institute of Good Manufacturing Practices India (IGMPI) நிறுவனம், கொச்சியில் உள்ள CIGMA Medical Coding Academy, சென்னையில் உள்ள National Institute of Medical Coding ஆகிய கல்வி நிறுவனங்களில் மருத்துவக் குறியீடு குறித்த முறையான படிப்புகளைக் கற்றுக் கொள்ளலாம். எனினும் ஆன்லைன் கல்வி மூலம், குறுகிய காலகட்டத்தில் மருத்துவக் குறியீடு குறித்த சிறிய கோர்ஸ்களையும் பயின்று கொள்ளலாம். இதற்கான சான்றிதழ்களைப் பெறுவதன் மூலம், மருத்துவக் குறியீட்டாளராகப் பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.