MBBS Counselling: தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை (ஜூலை 25) தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், ஆயுஷ் படிப்புகளுக்கு (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது.
அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். இதில் 78 ஆயிரத்து 693 பேர் தேர்ச்சி பெற்றனர்.
நாளை கலந்தாய்வு:
2023-2024ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்ததனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் கடந்த 16ஆம் தேதி வெளியானது. அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேர், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேர் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நாளை (ஜூலை 25) தொடங்குகிறது.
அதன்படி, நாளை காலை 10 மணி முதல் வரும் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழி மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 1,2ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும். மேலும், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு நேரில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 6 ஆயிரத்து 326 இளநிலை மருத்துவம் எனப்படும் எம்பிபிஎஸ் இடங்களும், அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் சேர்ந்து ஆயிரத்து 768 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.