2023- 24ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான  அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லூரிகளில் சேர்வதற்கு இன்றே (ஆகஸ்ட் 14) கடைசித் தேதி ஆகும். 


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை, மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மத்திய, மாநில இட ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சேர்க்கை தனித்தனியாக நடத்தப்படுகிறது. 


அனைத்து மாநிலங்களிலும் மாநிலக் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசுப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவை மத்திய அரசால் நிரப்பப்படுகின்றன. மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் மூலம் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ இடங்களில் சேர 40,193 பேர் விண்ணப்பித்தனர். மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மாணவர் சேர்க்கை மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். அகில இந்திய இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி முதல் நடத்தப்பட்டது. 


அவகாசம் நீட்டிப்பு


முன்னதாக, முதல்கட்டக் கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 11ஆம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் மாணவர்கள் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலஅவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. கல்லூரிகளில் சேராத மாணவர்களின் இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.


கட்டணம் எவ்வளவு?


2023- 24ஆம் கல்வி ஆண்டில் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒரு இடத்துக்கு, 4,50,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 13,50,000  ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. என்ஆர்ஐ ஒதுக்கீட்டுக்கு 24,50,000 ரூபாய் வசூல் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 


அரசு ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர மாநில அரசு வெளியிட்ட தர வரிசைப் பட்டியலைக் காண: https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N23074027.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் கட்டணத்தை வசூல் செய்தால் நடவடிக்கை


அனைத்து தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் தேர்வுக் குழு விதித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதைத் தாண்டி கூடுதல் கட்டணத்தை வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அறிய https://tnmedicalselection.net/news/11082023022600.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://tnhealth.tn.gov.in