தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மீண்டும் பள்ளிகள் சீராக இயங்கி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 843 பள்ளிகளும் செயல்பட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாக்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் குமார், செல்வராஜ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விஸ்வநாதன் ஆகிய அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த 57 பள்ளிகளில் உள்ள 418 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தகுதி இல்லாத வாகனங்கள் நிராகரிக்கப்படும் என்று ஆய்வு மேற்கொண்டுவரும் கூட்டாய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
1ஆம் வகுப்பு மெட்ரிக் பாடப்புத்தகத்தில் பிரதமர் மோடி சொன்ன முதலை கதை - வைரலாகும் புகைப்படம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்