மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிகளின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் -2009 ன் படி பள்ளி மேலாண்மைக் குழு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டன.




மயிலாடுதுறை மாவட்டத்தில் 321-தொடக்கப்பள்ளிகள், 91-நடுநிலைப்பள்ளிகள், 41- உயர்நிலைப்பள்ளிகள், 35- மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 488 பள்ளிகளில் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமையன்று இக்குழுவானது பள்ளி வளாகத்தில் கூடி பள்ளியின் தேவை, வளர்ச்சி, மாணவர்களின் கற்றல், கற்பித்தல், இடைநிற்றலை தவிர்த்தல், தேர்ச்சி பெற்ற அனைவரையும் உயர்கல்வி தொடர்வதை உறுதிசெய்தல் மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தலுடன் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி பள்ளி முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.




இக்குழுவின் உறுப்பினர்கள் பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிட்டு சமுதாயத்தின் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றிடவும், குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதை உறுதிசெய்வதோடு, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்வதுடன் தொடர்ந்து கண்காணித்து பிற துறைகளுடன் இணைந்து நிறைவேற்றி பள்ளிகளின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துணை புரியும் வகையில் செயல்பட வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் 10-ம் வகுப்பில் 38வது மாவட்டமாகவும், 12 -ம் வகுப்பில் 34 வது மாவட்டமாகவும் தரவரிசையில் பின்தங்கியுள்ளது. 


Thalapathy Vijay: நெல்லையில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய்! ஆர்ப்பரித்த தளபதி ஃபேன்ஸ்!




கம்பர் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் பிறந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைவரும் ஒருங்கினைந்து கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் வரை அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் சாதிக்க முடியும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்ககூடிய உன்னதமான பணியை சிறப்பாக செய்யவேண்டும்” என்றார்.


மேலும், ”பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் 1 மார்க், 2 மார்க் கேள்விகளை வகுப்புகளில் 15 நிமிடங்கள் தினந்தோறும் கேட்டு பதில் சொல்ல வைக்க வேண்டும். அப்படி பலமுறை கேட்கும்போது தெரியாத மாணவர்களுக்கும் கேள்வி பதில் மனப்பாடமாகிவிட்டால் 100 சதவீதம் மாணவர்கள் எளிதாக தேர்ச்சியடைந்துவிடுவர். 




இந்த முறையை பின்பற்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். நான் தேர்வில் வெற்றியடைந்துவிடுவேன் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் உதித்துவிட்டாலே நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற உந்துசக்தி வந்துவிடும். எனவே ஆசிரியர்கள் இந்த முறையை பின்பற்றி மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்து 100 சதவீதம் தேர்ச்சியை வென்றெடுக்க வேண்டும்” என்றார்.


பள்ளிகளில் நேரிடையாக வந்து மாணவர்களிடம் 1 மார்க், 2 மார்க் கேள்விகளை கேட்டு ஆய்வு மேற்கொள்வேன் என்றும் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டுகோள் விடுத்து ஆட்சியர் பேசியது அனைவரிடமும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்த்தசாரதி, ஞானபிரகாசம், முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர்கள் முத்துக்கணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.