சிறுத்தை புலி நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலியை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 


மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் சிறுத்தையை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 


சிறுத்தையை கண்காணிக்க ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், இந்த வகையான சிறுத்தை மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது எனவும், முடிந்தவரை மனிதர்களை பார்த்தால் அது விலகிச் செல்ல தான் செய்யும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் ஆடு ஒன்றை சிறுத்தை கடித்ததில் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.