நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டம் இன்று பல்கலைக்கழகத்தின் கூட்ட அறையில் நடைபெற்றது. இதில் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் புதிய துறைகளுக்கான பாடத்திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டத்தில் துறை சார்ந்த பேராசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டில் இளங்கலை பாடப் பிரிவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சி சைபர் செக்யூரிட்டி டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட மூன்று புதிய பாடப் பிரிவுகளும், முதுகலை படிப்பை பொறுத்தவரையில் இந்தியாவில் முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுடன் கூடிய தொல்லியல் துறை படிப்பும் அஃப்லைடு பிசிக்ஸ் பாடப்பிரிவுகளும் இந்த கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக முதுகலை தொல்லியல் துறையை பொருத்தவரையில் இந்தியாவில் முதல் முறையாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தான் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுடன் கூடிய தொல்லியல் துறை வட்டம் மேற்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பாடத்திட்டத்தை பொருத்தவரையில் தென் மாவட்டங்களில் குவிந்து கிடக்கும் அகழ்வாராய்ச்சி தொல்லியல் களங்கள் மிகப்பெரிய துணையாக இருக்கும் என்றும், அத்தோடு புதையுண்ட கடல் துறைமுக நகரங்களான கொற்கை, வட்டக்கோட்டை அதேபோன்று குமரிக்கண்டம் உள்ளிட்டவை குறித்து கடல் சார் அகழ்வாய்வு பாடத்திட்டங்களும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார். வெறும் அகழ்வாராய்ச்சி மட்டுமல்லாது புவியியல், அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்து தொல்லியல் படிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த பாடத்திட்டம் மூலமாக மாணவர்கள் நல்ல வேலை வாய்ப்பை பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் தொல்லியல் துறை படிப்பிற்காக இத்தாலி நாட்டின் பாரி பல்கலைக்கழகத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தொல்லியல் துறை படிப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று அப்லைடு பிசிக்ஸ் பாடத்திட்டத்தை பொருத்தவரையில் தென் மாவட்டங்களில் இயற்கை வளங்கள் அதிகமாக இருப்பதாகவும் காற்றாலை மின் உற்பத்தி, நீர் வளம் மூலமாக மின் உற்பத்தி உள்ளிட்டவை மேற்கொள்ளும் அதே வேளையில் அது சார்ந்த வளங்களை பயன்படுத்தி ஆற்றல்களை சேமிக்கும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஏதுவாக இந்த பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கூடிய விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்