மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: ’’நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி பணியாளர்களாகவும், தொகுப்பூதிய பணியாளர்களாகவும் பணியாற்றி வரும் 53 தொழிலாளர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய பல்கலைக்கழகத்திலேயே அறமும், மனிதநேயமும் மீறப்படுவது கண்டிக்கத்தக்கது.
53 பேர் தொகுப்பூதியத்தில் பணி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தூய்மைப் பணியாளர்கள், இரவுக் காவலர்கள், பாதுகாவலர்கள், மின்னியலாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளில் தொகுப்பூதிய பணியாளர்களாக 53 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதே பல்கலைக்கழகத்தில் 17 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பணிச் செயல்பாடுகள் குறித்து எந்தப் புகாரும் இதுவரை எழவில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விதிகளின்படி தினக்கூலி பணியாளராக சேரும் ஒருவர் ஐந்தாண்டுகள் பணி செய்த பின்னர் தொகுப்பூதிய பணியாளராக மாற்றப்படுவார். அடுத்த பத்தாண்டுகள் தொகுப்பூதிய பணியாளராக பணி செய்த பின்னர் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த 53 பணியாளர்கள் விஷயத்தில் மட்டும் இந்த விதிகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடைபிடிக்க மறுக்கிறது. நீதி வழங்க மறுக்கும் நிர்வாகம்
தொகுப்பூதிய பணியாளர்களாக பணியாற்றும் 53 பேரும் 50 வயதைக் கடந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் வேறு எங்கும் சென்று வேலை தேட முடியாது. பணி நிலைப்பு என்பது அவர்களின் உரிமை. இந்த உரிமையை பெறுவதற்காக தகுதியை அவர்கள் 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெற்று விட்டனர். அதனடிப்படையில் பணி நிலைப்பு வழங்குங்கள் என முந்தைய துணை வேந்தரிடம் 3 முறையும், இப்போதைய துணை வேந்தரிடம் இரு முறையும் மனு கொடுத்துள்ளனர். ஆனாலும் நீதி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுக்கிறது. பணி நிலைப்பு கிடைக்காத மன உளைச்சலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்; ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பணி செய்ய முடியாத அளவுக்கு படுக்கையில் வீழ்ந்துள்ளார். இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதே நிலை பிற பணியாளர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது. தொகுப்பூதிய பணியாளர்களின் தேவைகளும், மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 17 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும். தொகுப்பூதிய பணியாளராக 10 ஆண்டுகளை எப்போது அவர்கள் நிறைவு செய்தார்களோ, அப்போது முதல் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக கருதப்பட்டு பணி மூப்பு வழங்கப்பட வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
