விழுப்புரம்: விழுப்புரம் அருகே அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் நடந்த பயங்கரத் தொடர் வாகன விபத்தில், பஸ் மற்றும் கார் மோதி இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Continues below advertisement

லாரியை முந்திச் செல்ல முயற்சி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகேயுள்ள அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்று இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இருவர் பயணித்தனர். மேம்பாலத்தில் முன்னால் சென்ற லாரியை இருசக்கர வாகன ஓட்டி முந்திச் செல்ல (Overtake) முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.

Continues below advertisement

கார் அப்பளமானது!

அந்த சமயத்தில் பின்னால் வந்த சொகுசு பஸ், சாலையில் விழுந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார். இருப்பினும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, பஸ் திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக பஸ்ஸின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜான் அன்பழகன் என்பவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் படுகாயம்

இந்த பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த நபர் மற்றும் காரில் இருந்த 2 பேர் என மொத்தம் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தினால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

பலியான இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.