கல்வியையும்‌ கற்றல்‌ முறையையும்‌ ஜனநாயகப்படுத்தும்‌ செயல்திட்டத்தை இலக்காகக்‌ கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கும்  பள்ளிக்‌ கல்வித்துறை, மணற்கேணி என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. 


பொருளாதாரத்தில்‌ மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப்‌ பாடங்கள்‌ கிட்டும்‌ என்கிற நிலையைப்‌ போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே இதன் நோக்கம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன சிறப்பம்சங்கள்?


நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.


ஒவ்வொரு காணொலியின்‌ முடிவிலும்‌ கேள்விகள்‌ கேட்கப்பட்டு கற்போரின்‌ புரிதல்‌ திறனை சரி பார்க்கும்‌ வசதியும்‌ உள்ளது. இந்தச்‌ செயலியில்‌ உள்ள காணொலிகளில்‌ உள்ள பாடங்கள்‌ முறையான கற்றல்‌ பயணத்திற்கு வழிவகுக்கின்றன. அதாவது உயர் வகுப்பில்‌ உள்ள பாடப்பொருள்களை கற்றுக்கொள்ள வேண்டும்‌ என்றால்‌ முந்தைய வகுப்புப்‌ பாடங்களில்‌ உள்ள ஏதேனும்‌ ஒரு பாடப்பொருள்‌ தெரிந்தும்,‌ புரிந்தும்‌ இருக்கவேண்டும்‌. முந்தைய வகுப்புகளில்‌ உள்ள பாடப் பொருட்களைப்‌ படித்துவிட்டு பின்னர்‌ உயர் வகுப்பின் பாடப்பொருளை படிக்கலாம்‌ எனும்‌ வகையில்‌ வசதிகள்‌ செய்யப்பட்டுள்ளன. 


படிநிலைகளில் பாடங்கள்


எடுத்துக்காட்டாக, பன்னிரண்டாம்‌ வகுப்பில்‌ வரும்‌ ஒரு பாடப்பொருளை முறையாகப்‌ புரிந்து கொள்ள ஆறாம்‌ வகுப்பில்‌ அதற்கான அடிப்படைப்‌ பாடம்‌ இருக்கிறது என்றால்‌ அதைப்‌ படித்துப்‌ புரிந்துகொண்டுவிட்டு பின்‌ ஏழாம்‌ வகுப்பில்‌ அது குறித்துப்‌ பாடமிருந்தால்‌ அதையும்‌ படித்துவிட்டு படிப்படியாக பன்னிரண்டாம்‌ வகுப்புப் பாடப்பொருளுக்கு வரலாம்‌. 


இதன் மூலம்‌ பாடங்களை எளிதில்‌ புரிந்துகொள்வதற்கும்‌ எதையும்‌ விட்டுவிடாமல்‌ படிப்பதற்கும்‌ வசதி செய்யப்பட்டுள்ளது. இச்செயலியின்‌ திரையில்‌ தொழில்நுட்பக்‌ கலைச்‌ சொற்களை ஆங்கிலத்திலும்‌ தமிழிலும்‌ காணலாம்‌. கற்றல்‌ செயல்பாட்டை இச்செயலி மிகவும்‌ மகிழ்ச்சிகரமானதாக மாற்றும்‌.


இந்த மணற்கேணி செயலியில்‌ தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ என இரு மொழிகளிலும்‌ 6 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை மாநிலப்‌ பாடத்திட்டத்தில்‌ உள்ள பாடங்களை 27,000 பாடப்பொருள்களாக, வகுப்புகள்‌ தாண்டி வகைபிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கங்களை உருவாக்கி அளித்திருக்கிறது மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும் ‌பயிற்சி நிறுவனம்‌ (எஸ்‌.சி.இ.ஆர்‌.டி) நிறுவனம்‌. இதன்கீழ்‌ உருவாக்கப்பட்டுள்ள காணொலிகள்‌ 27,000 பாடப்பொருள்களாகத்‌ தொகுக்கப்பட்டுள்ளன.


முற்றிலும் இலவசம்


இந்தச்‌ செயலி இலவசமாகவே வழங்கப்படுகிறது. கற்போரின்‌ கற்கும்‌ வேகத்திற்கு ஏற்பவாறு இச்செயலியை பயன்படுத்தும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்‌ ஏற்படும்‌ சந்தேகங்களை உடனுக்குடன்‌ தெளிவுபடுத்திக்‌ கொள்ளும்‌ விளக்கப் படங்கள்‌ உள்ளன. அனைத்துக்‌ காணொலிகளையும்‌ கேள்விகளையும்‌ தரவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. அவற்றை தரவிறக்கம்‌ செய்து கொள்ள கடவுச்சொல்‌ எதுவும்‌ தேவையில்லை. எந்தத்‌ தடையும்‌ இன்றி மிக எளிதாக அவற்றை தரவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. 


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis என்னும் சுட்டியில்‌ உங்கள்‌ அலைபேசியில்‌ உள்ள ப்ளே ஸ்டோருக்குச்‌ சென்று மணற்கேணி செயலியை இன்ஸ்டால்‌ செய்து கொள்ளலாம்‌.


மணற்கேணி செயலியை ப்ளே ஸ்டோரில்‌ தேடவேண்டுமெனில் ‌TNSED  Manarkeni என்று உள்ளீடு செய்து தேடவேண்டும்‌.