பள்ளி குழந்தைகள் பாராளுமன்ற பிரதமருக்கான முடிவு அறிவிக்கப்பட்டு பதவியேற்கவுள்ளனர்.
 
பிரச்சாரம் மற்றும் வாக்குசேகரிப்பு நடைபெற்றது
 
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளின் தலைமைத்துவ பண்பு, குழந்தைகள் உரிமை, திறன் வளர்ப்பு, உலக குறிக்கோள், சமுதாய பங்கேற்பு போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி குழந்தைகள் பாராளுமன்றம் மாதிரி தேர்தல் போல நடத்தப்பட்டுள்ளது. முதலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாணவிகளின் பெயர்களுடன் வாக்குப்பதிவு எண்ணுடன் விளம்பர பலகை வைத்து பிரச்சாரம் மற்றும் வாக்குசேகரிப்பு நடைபெற்றது. இதனையடுத்து குழந்தைகள் பாராளுமன்ற மாதிரி தேர்தல் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த ஆக.25ஆம் தேதி மாநகராட்சி பள்ளியில்  வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
850 மாணவிகளில் 741 மாணவிகள் வாக்கு செலுத்தினர்
 
இதில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் தங்களது வாக்குகளை செலுத்தினர். முன்னதாக வாக்கு சீட்டுகளில் வாக்கு செலுத்துவது குறித்து செய்முறை செய்து காண்பிக்கப்பட்டது.  இதனையடுத்து தேர்தல் வாக்குப்பதிவு போன்றே மாணவிகளின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டது. அதன்பின் வாக்குசெலுத்தும் மாணவிகளின் கைகளில் அடையாள மை இடப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டு பாதுகாப்பாக மறைவாக வைக்கப்பட்டது. அதில் மை அச்சு மூலமாக வாக்குகளை செலுத்தினர். இதில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான 19 மாணவிகள் வேட்பாளர்களாக மாணவிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  850 மாணவிகளில் 741 மாணவிகள் வாக்கு செலுத்தினர். இதில் 86.75 சதவீத வாக்குகள் பதிவாகின.  
 
பிரதமர், துணை பிரதமர், கல்வித் துறை அமைச்சர் - 17 துறைகள்
 
தேர்தலில் 19 வேட்பாளர்களான மாணவிகள் பெற்ற வாக்குகள் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை அதிகாரியாக இருந்த ஆசிரியை சகாயமேரி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களான மாணவிகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை முதல் மதியம் வரை வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை அதிகாரி வாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து வாக்கு சீட்டுகள் எண்ணப்பட்ட நிலையில்  நாளை காலை பள்ளி தொடங்கும் முன் வழிபாட்டு கூட்டத்தின் போது வாக்குகளின் அடிப்படையில் பள்ளி குழந்தைகள் பாராளுமன்றத்திற்காப பிரதமர், துணை பிரதமர், கல்வித் துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட 17 துறைகளுக்கு பிரதிநிதிகள் பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ளவுள்ளனர். பதவியேற்றவர்கள் நடப்பு  கல்வியாண்டு காலம்வரை இப்பதவியில் பள்ளி செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை குறித்து பேசிய மாணவிகள் தேர்தல் போலவே குழந்தை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்கு எண்ணிக்கையிலும் நாங்கள் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்