குடியரசுத் தலைவர்கள் 6 பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர்கள் யார் யார் தெரியுமா? பார்க்கலாம்.


பாரம்பரியம் மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கியது. மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பட்டதாரிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டங்களை வழங்குகிறார். 


பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பேசும்போது, ”எனக்கு முன்னாள், குடியரசுத் தலைவர்கள் 6 பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து பெருமை சேர்த்துள்ளனர். பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலைக் கழகம் விளங்குகிறது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. எந்தவொரு கவலையிலும் நீங்கள் மூழ்கிவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.


ஒரு வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.


பாலின சமத்துவம்


பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம்’’ என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசினார்


இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 


முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். 


யார் யார் எப்போது?


குறிப்பாக ராதாகிருஷ்ணன் இந்திய நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் வி.வி.கிரி 4ஆவது குடியரசுத் தலைவராகவும் இருந்தனர். அதேபோல சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த நீலம் சஞ்சீவ ரெட்டி 6ஆவது குடியரசுத் தலைவராகவும் ஆர்.வெங்கட்ராமன் 8ஆவது குடியரசுத் தலைவராகவும் இருந்தனர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த மாமேதை அப்துல் கலாம் நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் விஜயலட்சுமி ரெட்டி உட்பட பல சிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்துக்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா இங்கு படித்தவர்தான். நானும் இதே பல்கலை.யைச் சேர்ந்தவன்தான். அந்த வகையில் சீனியராக இன்று இங்கு வந்துள்ளேன்.


தென்னிந்தியாவுக்கு மட்டுமல்லாமல், நவீன இந்தியாவுக்கு பெரும் பங்களிப்பை சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.  தகுதியான வேலை கிடைத்த பின்னர் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். கல்வியே அனைவருக்கும் மிகப்பெரிய சொத்து’’ என்று முதல்வர் பேசினார்.