சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். துணை வேந்தர் இல்லாமலேயே இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.


பழமையான பல்கலைக்கழகம்


சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 


எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இதில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.


80-க்கும் மேற்பட்ட துறைகள்


பாரம்பரியம் வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தில் 80-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தின்கீழ் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இதுவரை பட்டம் வழங்கப்படவில்லை.


சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடம் காலியாகவே உள்ளது. ஆளுநர்- மாநில அரசு மோதலால், துணை வேந்தரைத் தேடும் குழு நியமிக்கப்படவில்லை.


இதனால், துணை வேந்தர் நியமனம் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு முடிவுகள், பட்டமளிப்பு விழா உள்ளிட்ட கல்லூரி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக, மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டி வந்தனர்.  


166ஆவது பட்டமளிப்பு விழா எப்போது?


இந்த நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166ஆவது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 4ஆவது வாரத்தில் நடைபெறும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். ஓர் ஆண்டுக்குப் பிறகு இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. துணை வேந்தர் இல்லாமலேயே இந்த பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது.


முனைவர் பட்டம் பெற விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.