தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தின்166-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை அரங்கில் இன்று (செப். 24ஆம் தேதி) நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில், 1,06,789 மாணவர்கள் பல்வேறு வகையான பட்டங்களை இன்று பெற்றனர். மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், மேலாண்மை அறிவியல், கல்வியியல், கலை படிப்புகள், இந்திய மொழிகள், நுண் கலை ஆகிய படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.


ஆளுநர் ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு


பட்டமளிப்பு விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். உயர் கல்வித்துறை அமைச்சரும் இணை வேந்தருமான பொன்முடி கலந்துகொண்டார்.


விழாவில் இந்திய அணு சக்திக் கழகத்தின் முன்னாள் தலைவரும், மும்பை ஹோமிபாபா தேசிய நிறுவனத்தின் வேந்தருமான அனில் ககோட்கர் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


’’இந்தியா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது. வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது.




பொருளாதார முன்னேற்றத்தால் அதிகரிக்கும் சமத்துவமின்மை


இன்றைய நிலையில், இந்தியப்‌ பொருளாதாரம் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த தசாப்தத்திலேயே (10 ஆண்டுகள்) 3-வது இடத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு சராசரி இந்தியரின் தனிநபர் வருமானம் உலகளவில் மிகவும் குறைவாக 135- 140ஆவது இடங்களுக்குள் உள்ளது.


வளர்ச்சியடைந்த இந்தியாவை எண்ணி கனவு காண்கிறோம். அதேநேரத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சமத்துவமின்மையையும் அதிகரிக்க வழிவகுக்கிறது. குறிப்பாக நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.


உலகளாவிய போட்டியில் நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்ற சூழலில், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க கிராமப்புறங்களில் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும். அதிர்ஷ்டவசமாக இதற்கு பன்முகத்தன்மை வாய்ந்த மக்கள் இருக்கின்றனர்.


சூழலுக்கு ஏற்ப தனியான கல்வி முறைகள்


இப்போது நிறைய பல்கலைக்கழகங்கள் அந்தந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப புதுமையான தனித்துவமாக, கல்வி நிறுவனத்துக்கென தனியான கல்வி முறைகளை உருவாக்கி இருக்கின்றன. இதன் மூலம் கிராமப்புறம் மேன்மை அடைய புது வழிகளும் வாய்ப்புகளும் கிடைக்க வழி உள்ளது.


தற்போது தொழில்நுட்பம் புது வீச்சுடன் பாய்ந்து வரும் நிலையில், சமுதாயம் விரைந்து மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இதற்கு இளம் மக்களை தயார்படுத்த, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கக் கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டியது அவசியமாகிறது. குழுவாக இணைந்து செயல்படுவதையும் மாணவர்களுக்குக் கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டும். நம்முடைய உயர் கல்வி முறை, வளர்ச்சிக்கான ஆதாரமாக இருக்க வேண்டும்’’.


இவ்வாறு அனில் ககோத்கர் தெரிவித்தார்.