தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு, தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கியது. இவ்வாறு மொத்தம் 2,381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் படித்து வந்தனர். எனினும் கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. 


இந்நிலையில் 2022- 23ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாகவும், மழலையர் வகுப்புகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


இதன்படி, சமூக நலத்துறையின்கீழ் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களே எல்கேஜி, யூகேஜி வகுப்பு மாணவர்களை கவனித்துக் கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அங்கன்வாடிகள் எப்படிச் செயல்படுகின்றன?


பால்வாடி, பாலவாடி, அங்கன்வாடி எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த மையங்களில் அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் (சமையலர்) என்று இரண்டு நபர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 10ஆம் வகுப்பு என்பதே அங்கன்வாடி பணியாளர்களுக்கான தகுதியாக இருக்கிறது. 


அங்கன்வாடி பணியாளர் கற்பித்தல் சார்ந்த பணிகளைச் செய்தாலும், அது நெறிப்படுத்தப்பட்டதாக இருப்பதில்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்குவது, குழந்தைகளுக்குத் தடுப்பூசி, 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்குவது, தகவல் பதிவேற்றப் பணிகள், மீட்டிங்குகள், வாக்காளர் பட்டியல் பணி ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. 




இந்த நிலையில் மழலையர் வகுப்பு மாணவர்களை அங்கன்வாடி பணியாளர்கள் கவனித்து, கற்பிப்பது சாத்தியமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து 'ஏபிபி நாடு' சார்பில், ஆசிரியர்களிடம் பேசினேன்.


தனியாருக்குத் தாரை வார்ப்பது ஏன்?- ஆசிரியர் சிகரம் சதிஷ்


அரசுப் பள்ளிகளில் படித்தால் உயர் படிப்புகளில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்கிறோம். அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பேசுகிறோம். ஆனால் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கான வாய்ப்பை அரசே மறுப்பது ஏன்? 


தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் சேர இந்த ஆண்டு 1.40 லட்சம் குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அரசின் நிதியுதவியுடன் தொடர்ந்து தனியார் பள்ளிகளில்தானே படிப்பர்? கையில் இருக்கும் பள்ளி மாணவர்களை, அரசே தனியாருக்குத் தாரை வார்க்கும் பணிதானே இது? தனியார் பள்ளிகளுக்கு அளிக்கும் கோடிக்கணக்கான ரூபாயைக் கொண்டு, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தலாமே!


அண்மையில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்த தகவலின்படி, தமிழ்நாட்டில் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில்தான் மாணவர்கள் உள்ளனர். இந்த சூழலில் புதிதாக சேர வரும் மாணவர்களையும் திருப்பி அனுப்புவது சரியா? 




இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை ஏன் நியமிக்க முடியவில்லை. நிதிப் பற்றாக்குறையையே எப்போதும் கைகாட்டிக் கொண்டு இருக்கக் கூடாது. கல்விக்கும் மருத்துவத்துக்கும் முதலீடு செய்ய, ஓர் அரசு கணக்கு பார்க்கக்கூடாது. 


புதிய கல்விக்கொள்கை அமலாக்கமா?- ஆசிரியை சுபாஷினி ஜெகநாதன்


குழந்தைகளுக்கு 3 முதல் 8 வயது வரை மொத்தம் 5 ஆண்டுகள் அடிப்படை கட்டமைப்புக் காலம் (Foundation Stage) என்கிறது புதிய கல்விக் கொள்கை. இதில் குழந்தைகள் 3 ஆண்டுகள் (3 முதல் 6 வயது வரை) பாலவாடிகா எனப்படும் அங்கன்வாடிக்குச் செல்ல வேண்டும்.


மீதம் இருக்கும் 2 ஆண்டுகள் ( 6 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகள்) இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்குச் செல்லவேண்டும். எனில் தமிழகத்தில் இப்போது எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடல் என்ற அறிவிப்பு சரிதானா?. இது அதுதானா?... 


அங்கன்வாடிகள் செய்வது என்ன?- ராஜேஸ்வரி- க.பரமத்தி அங்கன்வாடி பணியாளர்  


10 முதல் 19 வயது வரையிலான வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், 5 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு அங்கன்வாடிகள் பொறுப்பேற்கின்றன. வளரிளம் பெண்களுக்கு சத்து மாத்திரைகள், கர்ப்பிணிகளுக்கான சத்துருண்டை, 0- 3 வயது வரை சத்து மாவு ஆகியவற்றை வழங்குகிறோம். 


2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சாப்பிடப் பழக்கப்படுத்துவது, கை கழுவுவது, கழிப்பறை செல்லப் பழக்கப்படுத்துவது, வணக்கம் சொல்வது, பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றைப் பரிசோதிப்பது, தன் சுத்தம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறோம். தமிழ்ப் பாட்டு, விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுப்போம். சில தமிழ், ஆங்கில எழுத்துகள், எண்களையும் கற்றுத் தருகிறோம். 




ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் செல்வக்கண்ணன்


3 வயதுக்கு முன்பாகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் தற்போதைய பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது. மழலையர் வகுப்புகள் இருந்தாலே, எளிதாக அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை உயரும். தனியார் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மீண்டும் அரசுப் பள்ளிக்குத் திரும்புவது அரிதுதான். 


இதற்கிடையே சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கிய மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி பயிற்சி முடித்த ஆசிரியர்களை நியமிக்காதது முதல் சிக்கலை ஏற்படுத்தியது. அதற்கு பதிலாக அதே மாவட்டத்தில் கூடுதலாக இருந்த இடைநிலை ஆசிரியர்களையும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களையும் மழலையர் வகுப்பில் பணியமர்த்தியது, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இரண்டுமே ஆசிரியர் பணிதான் என்றாலும், தங்களைப் பணியிறக்கம் செய்துவிட்டதாகவே ஆசிரியர்கள் நினைத்தனர். 


இப்போதைய சூழலில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் கைவைக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை மீண்டும் தொடங்கி மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களைப் புதிதாகத் தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். இதுவே அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கான தீர்வாக இருக்கும். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காக மழலையர் வகுப்புகளை அரசு கைவிட நினைக்கிறதோ? என்று அச்சம் எழுகிறது. அதே நேரத்தில், அங்கன்வாடிகளிலும் மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 


தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் தமிழக அரசு- ஆசிரியை கிருஷ்ணவேணி


அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையைக் குறைக்க நினைக்கும் அரசியல் இது. சமூக நலத்துறையில் இருந்து கிடைக்கும் நிதியைப் பள்ளிக் கல்வித்துறையே பெற்று, மழலையர் வகுப்புகளை நடத்தலாமே. 




அரசு அதிகாரப்பூர்வமாக மழலையர் வகுப்புகளைத் தொடங்குவதற்கு முன்பே 7ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில்  (முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளி) மழலையர் வகுப்புகளைத் தொடங்கி, நடத்தி வருகிறோம். மாண்டிசோரி ஆசிரியர்களுக்கான ஊதியம், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் என்ஜிஓக்களின் ஆதரவு, உதவியுடன் பெறப்படுகின்றன. எங்களைப்போல ஏராளமான பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. 


இந்த நிலையில் எல்கேஜி, யூகேஜி மூடல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசுப் பள்ளிகளைக் காக்க வேண்டிய அரசே இப்படிச் செய்யலாமா? தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதே இதற்கான 100 சதவீதக் காரணமாகத் தெரிகிறது. இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். 


இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். 


கொரோனா கால ஊரடங்கால் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அரசுப் பணிக்காகப் பல்லாயிரக்கணக்கான தகுதி வாய்ந்த இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நிதி நிலையை அரசு காரணம் காட்டாமல், உடனடியாக மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து, மழலையர் வகுப்புகளைப் புதுப்பொலிவுடன் முழு வீச்சில் தொடங்க வேண்டும்.