அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத்‌ திறனறித்‌ தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். 


இதை மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையப் பக்கத்துக்குச் சென்று அறிந்துகொள்ளலாம். 


பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.


2022- 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நடைபெறும் இத்தேர்வில்‌ 1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. இத்தேர்வில்‌ 50 சதவீத அளவுக்கு அரசுப்‌ பள்ளி மாணவர்களும்‌, மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பள்ளி மாணவர்கள்‌ உள்ளிட்ட பிற தனியார்‌ பள்ளி மாணவர்களும்‌ தெரிவு செய்யப்படுவார்கள்‌.


மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ தேர்வு


தமிழ்நாடு அரசின்‌ 10-ஆம்‌ வகுப்புத் தர நிலையில்‌ உள்ள தமிழ்‌ பாடத் திட்டங்களின்‌ அடிப்படையில்‌ தேர்வு நடத்தப்படும்‌. இந்தத் தேர்வு கொள்குறி வகையில்‌ அமைந்திருந்த நிலையில், அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ தேர்வு நடத்தப்பட்டது.




2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம்‌ வகுப்பு மாணவர்கள் தேர்வை எழுதினர்.


இந்தத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் 2,50,731 மாணவர்கள் பங்கேற்றனர்.






தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?


* மாணவர்கள் https://apply1.tndge.org/ttse-result-2022 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும். 
* அதில், பதிவெண் பகுதியில் பதிவெண்ணை உள்ளிடவும்.
* பிறந்த தேதி பகுதியையும் பூர்த்தி செய்யவும். 
* தகுந்த தகவல்களைக் கொடுத்து, தேடுதல் என்ற பொத்தானைச் சொடுக்கவும். 


* இதில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


இதையும் வாசிக்கலாம்: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை, தேர்வுசெய்யும் முறை இதுதான் - https://tamil.abplive.com/news/chennai/sports-development-authority-of-tamilnadu-goverment-special-scholarship-cheme-for-sportspersons-87591/amp