கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க திமுக அரசு முயற்சித்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடூர கைரேகைச் சட்டம் நாடு முழுவதும் அமலபடுத்தியபோது, அதை எதிர்த்த தமிழ்நாட்டில், குறிப்பாக அப்போதைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உள்ள பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினர் மீது இச்சட்டம் கொடூரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
அந்தச் சட்டத்தை எதிர்த்து 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னகத்தின் ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று குறிப்பிடப்படும் பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 16 போ் உயிர்த் தியாகம் செய்தனர்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள்
ஆங்கிலேயர் காலத்தில் இதுபோன்ற கொடுஞ்சட்டங்களால் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயமான பிரமலைக் கள்ளர் சமுதாய மக்கள், கல்வி ஒன்றே தங்களது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சி என்பதை உணா்ந்து அமைக்கப்பட்டவையே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள்.
ஆங்கிலேயர் காலத்திலேயே இப்பள்ளிகளைக் கட்டமைக்க தங்களுக்கு இருந்த எளிய பொருளாதார நிலையிலும், தங்கள் வளமான எதிர்காலத்திற்காக “கள்ளர் காமன் பண்ட்” நிதியை உருவாக்கி, தங்கள் நிலங்களையும், உழைப்பையும் முதலீடாக வழங்கி, இப்பள்ளிகளை நிறுவிய பெருமைக்குரியவர்கள் கள்ளர் சமுதாய மக்கள்.
இத்தகைய நெடிய வரலாறு கொண்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்,சுதந்திரத்திற்குப்பின் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில், கள்ளர் சீரமைப்பு இணை இயக்குனரின் கீழ் இயங்கி வருகின்றன. தற்போது, மதுரை மாவட்டத்தில் - 146, தேனி மாவட்டத்தில் - 84, திண்டுக்கல் மாவட்டத்தில் - 62 என மொத்தம் 292 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளும், அதோடு இணைந்து 57 மாணவர் விடுதிகளும் இயங்கி வருகின்றன.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இயங்கிய கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள்
எனது தலைமையிலான அதிமுக அரசில் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள் மிகச் சிறப்பாக இயங்கி வந்ததை 2020-ஆம் ஆண்டில் ஆங்கில நாளேடு சுட்டிகாட்டியதை நினைவுகூற விரும்புகிறேன். அதிமுக ஆட்சிக் காலங்களில் இப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு கள்ளா மாணவர் விடுதிகளைப் பராமரிக்க முடியவில்லை என்ற கண்துடைப்பு காரணத்தைக் கூறி, 2022-ஆம் ஆண்டு கள்ளர் மாணவர் விடுதிகளை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க முயற்சி மேற்கொண்டபோது, கள்ளர் சமுதாய மக்களின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு இம்முயற்சி அரசின் தொடர் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிய வருகிறது.
திமுக அரசு கள்ளர் மாணவர் விடுதிகளைத் தொடர்ந்து, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினால், இதுவரையில் இச்சமூக மக்களுக்குக் கிடைத்து வந்த கல்வி கற்கக்கூடிய தளங்கள், வேலைவாய்ப்பு, நெடிய வரலாற்று அடையாளங்கள் அழிவதற்கான வாய்ப்புகள் போன்ற பல அடிப்படை உரிமைகள் பறிபோகும் என்பதால், கள்ளர் சமுதாய மக்களிடையே அரசின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியையும், கடுங்கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நான் ஏற்கெனவே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
கள்ளர் சமுதாய மக்களின் ஒருமித்த குரலில், தங்களது பள்ளிகள் மற்றும் விடுதிகளை பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றும் முயற்சிகளைக் கைவிடக் கோரியும், தேவையான நிதியை ஒதுக்கிடவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை திமுக அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிடில் பாதிப்புக்குள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று திமுக அரசை எச்சரிக்கிறேன்''.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.