மகாராஷ்டிர மாநிலத்தில் மழலைய, தொடக்கப் பள்ளி மாணவர்களின் நேரத்தை மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மகாராஷ்டிராவில் தற்போது பள்ளிகள் காலை ஏழு மணிக்குத் தொடங்குகின்றன. அதற்குப் பதிலாக காலை 9 மணிக்குப் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய பள்ளி நேரம் அடுத்த கல்வியாண்டு முதல், அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ கேஜி முதல் 2ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.


ஆளுநர் ரமேஷ் பயாஸ் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நல மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில்  வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.


1 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள்


மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 65 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ளன. அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,10,114 பள்ளிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் பள்ளி நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. எனினும் அரசின் இந்த முடிவுக்கு கலவையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.


தற்போதெல்லாம் குழந்தைகளின் உறக்க முறை மாறிவிட்டது. நள்ளிரவு வரை விழித்திருக்கும் குழந்தைகள் காலையில் பள்ளி செல்ல சீக்கிரமே எழுந்திருக்க வேண்டியதாக உள்ளது. இதனால் அவர்களுக்குப் போதிய அளவில் உறக்கம் கிடைப்பதில்லை. அதனால் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.


உறக்க முறை சரியா?


குழந்தைகளின் உறக்க முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஆனால், காலையில் அவர்களைத் தாமதமாக எழுப்புவது அல்ல. இரவு அவர்களை விரைவாகத் தூங்க வைப்பதுதான் சரி என்கின்றனர் குழந்தைகள் ஆர்வலர்கள்.


இது குறித்து மகாராஷ்டிரா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் கூறும்போது, ’’மழலையர் பள்ளி, எல்கேஜி, யூகேஜி, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வரை வரையான பள்ளிகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


நிபுணர் குழு அடிப்படையில் நடவடிக்கை


இது தொடர்பாக குழந்தைகள் மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் தீபக் கேசர்கர் தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: Half Yearly Holidays: தொடங்கிய அரையாண்டு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை- ஜன.2 பள்ளிகள் திறப்பு