பள்ளி பாடத்திட்டங்களில் போக்சோ சட்டம், அறிவியல்பூர்வமான கழிவு மேலாண்மை ஆகியவை பற்றிய பாடங்கள் சேர்க்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, இந்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. 


இந்த அறிவிப்பை மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, கேரளாவின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ், கழிவு மேலாண்மையில் உள்ள சிக்கல்கள் களையப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பள்ளி பாடத்திட்டத்தில் கழிவு மேலாண்மை அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக மாநிலத்தின் தூய்மைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் கழிவுகள் மேலாண்மைக்கு, அறிவியல்பூர்வமாகத் தீர்வு காணும் வழிமுறைகள் சேர்க்கப்படும் என்று அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்தார். 


போக்சோ சட்டமும் அறிமுகம் (THE POSCO ACT)


அதேபோல, பாலியல் அத்துமீறல்களில் இருந்து குழந்தைகளைக் காப்பது குறித்த போக்சோ சட்டம் பற்றி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, ஜாமீன் கோரிய மனு ஒன்று பற்றிப் பேசிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் இருந்து காப்பதன் அவசியத்தையும், குழந்தைகளின் உரிமைகளை அவர்கள் அறியச் செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் பேசி இருந்தார். 


அதைத் தொடர்ந்து எஸ்சிஇஆர்டி எனப்படும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , பள்ளி பாடப் புத்தகங்களில் போக்சோ சட்டம் குறித்து சேர்க்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து துறைசார் நிபுணர்களின் கருத்துகளையும் எஸ்சிஇஆர்டி கேட்க உள்ளது. 


முதல்கட்டமாக 2024- 25ஆம் கல்வி ஆண்டில், 1, 3, 5, 6, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்சோ குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மீதமுள்ள 2, 4, 7 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025- 26ஆம் கல்வி ஆண்டில் பாடத்திட்டம் அமலாக உள்ளது.


மாநில அரசின் இந்த முன்னெடுப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாகக் கேரளாவில்தான் போக்சோ சட்டம் பாடமாக உள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளது.


போக்சோ சட்டம் என்றால் என்ன?


போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.


இதையும் வாசிக்கலாம்: 10th Original Certificate: மாணவர்களே தயாரா? இன்று முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவது எப்படி?