பள்ளி மாணவர்கள் நல்வழியில் வளரும் பொருட்டு ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பதை குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது கல்வி உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Continues below advertisement

ஆசிரியர்கள் - மாணவர்கள் பிணைப்பு

மனிதனை வாழ்க்கையில் நல்வழிப்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒழுக்கத்தை பேணி அவர்களை நல்வழிப்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த நபராக மாற்றுவதில் ஆசியர்கள் பங்கு அளப்பறியது. அதனால் தான் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்கள் பார்க்கப்படுகிறது. இத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த தண்டனை என்ற ஒன்றை வழங்குவது காலம் காலமாக இருந்தாலும் தற்காலத்தில் அது முற்றிலும் குறைந்துள்ளது. 

விதவிதமான தண்டனைகள் வழங்கி மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். ஆனால் சில இடங்களில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் ஆசிரியர் சமூகம் மீது மிகப்பெரிய அளவில் களங்கம் ஏற்பட காரணமாக அமைகிறது. கடந்த காலங்களில் பெற்றோர்கள் தாங்களால் திருத்த முடியாத பிள்ளைகளை ஆசிரியரிடம் நீங்கள் அடித்தாவது திருத்துங்கள் என சொல்லும் வழக்கம் இருந்தது. நாமும் அதனை பார்த்திருக்கலாம். 

Continues below advertisement

ஆனால் இக்கால பெற்றோர்கள் குழந்தைகளை கண்ணின் மணிபோல காத்து யாரும் அடிக்க என்ன, திட்டக்கூட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள் பிரம்படி உள்ளிட்ட தண்டனைகள் வழங்கக்கூடாது. அனைவர் முன்னிலையிலும் மட்டம் தட்டக்கூடாது என பல கண்டிஷன்களை பள்ளிகளுக்கு வழங்கும் அளவுக்கு காலம் வந்து விட்டது. குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என்றால் அவர்களை நல்வழிப்படுத்தும் முறை முற்றிலும் காணாமல் போய் விட்டது. 

கேரளாவில் தொடரப்பட்ட வழக்கு

இப்படியான நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 36 வயதுடைய சிபின் என்ற நபர் இந்த  வழக்கை தொடுத்திருந்தார். அதில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி மதியம் 12.30 மணியளவில் வெங்கனூரில் உள்ள விபிஎஸ் மலங்கரா பள்ளியின் ஆசிரியர் என்னுடைய மகனை பிட்டத்தில் பிரம்பால் அடித்து காயப்படுத்தினார். மூன்று நாட்களுக்குப் பின் விழிஞ்சம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று வலி அதிகமாக இருந்ததால் சிகிச்சை அளித்தேன். தொடர்ந்து காவல்துறையை அணுகி புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் குமார், “பள்ளியில் மாணவனை ஒழுக்கப்படுத்த குறைந்தபட்ச உடல் ரீதியான தண்டனையைப் பயன்படுத்துவது சிறார் நீதிச் சட்டம் அல்லது பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் குற்றமாக கருத முடியாது என்று தெரிவித்தார். மேலும் ஆபத்தான ஆயுதங்கள் என்ற பிரிவில் பிரம்பு இடம் பெறவில்லை. மேலும் ஒரு மாணவனை பள்ளிக்கு அனுப்பும்போது, பள்ளி ஒழுக்கத்தைப் பேணுவதற்கும். பள்ளியின் விதிகளின் அடிப்படையில் மாணவனைப் பயிற்றுவிப்பதற்கும் பெற்றோர் ஆசிரியருக்கு மறைமுகமான அதிகாரத்தை வழங்குகிறார்கள். 

பள்ளி மாணவர்களின் நன்னடத்தை கருதி ஆசிரியர்கள் பிரம்பு பயன்படுத்துவதை குற்றமாக கருத முடியாது. ஆசிரியர்களின் அத்தகைய முயற்சி சமூக அக்கறை கொண்டது. மாணவர்களுக்கு காயம் ஏற்படுத்தாமல் தண்டனை வழங்கி நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களின் முயற்சியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.