கரூர் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளில், மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெரிய வருகிறது. மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 




படித்த இளைஞர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் அவர்களின் படிப்பு, திறமைக்கேற்ப வேலை கிடைப்பதில்லை. படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையை தான் பலர் பார்த்து வருகின்றனர். படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 


எனவே படிக்கும் போதே மாணவ, மாணவிகளுக்கு படிப்புடன் கூடிய தொழிற்கல்வியும் சேர்த்து அளித்தால், அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி அளித்து வந்தது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஈசநத்தம், பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் கல்வி அளிக்கப்பட்டது. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல்ஸ், மல்டி ஸ்கில், புட் ப்ராசஸ், பியூட்டிசன் வொர்க் ஆகிய தொழிற்கல்வி படிப்புகள் அந்தந்த பள்ளிகளில் 2 பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. பள்ளிகளில் தினமும் ஒரு பாட வேளையில் இந்த தொழிற்கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்காக பள்ளிகளில் ஆய்வகமும் தொடங்கப்பட்டது.




மேலும் 9, 10 வகுப்புகளை தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இந்த தொழிற்கல்வி படிப்பு விரிவாக்கம் செய்ய பள்ளிகளில் விவரம் சேகரிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணமோ என்று தெரியவில்லை இந்த கல்வியாண்டிலேயே 4 அரசு பள்ளிகளிலும் தொழிற்கல்வி படிப்பு திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படிப்புடன் கூடிய தொழிற்கல்வி என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மாணவ, மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்" என்ற பழமொழிக்கேற்ப படித்த இளைஞர்கள் கைத்தொழில் கற்று  இருந்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்ட தொழில்கல்வி படிப்பு திட்டத்தை, அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண