கரூர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.


 




 


மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் கல்வி அறிவை பெறுவது மிகவும் அவசியம். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவக்கப்பட்டு செயல்பட்டபோதும், தனியார் பள்ளிகள் அதற்கு போட்டியாக வளர்ந்து வருவதும், பெரும்பாலான பொதுமக்கள் அரசு பள்ளியை தவிர்த்து விட்டு தனியார் பள்ளிகளில் ஆர்வம் காரணமாக சேர்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்ற பலரும் உலக அளவில் சாதனை நிகழ்த்தியுள்ளனர். மேலும் அரசு பள்ளிகளின் பல்வேறு நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


 


 




இதனால் ஏழை, எளிய மக்கள் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்டம், தாந்தோணிமலைபட்டி பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து, புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்று, நோட்டு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.


 


 




மேலும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி பயில 7.5% முன்னுரிமை அளிக்கப்படுவது, பெண் கல்வியை ஊக்கி வைக்கும் வகையில் புதுமைப்பெண் திட்ட மூலம் கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், தொடக்க நிலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருவதன் காரணமாக அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.