கரூர் அரசு மாதிரிப் பள்ளியை  துவக்கி வைத்து அகன்ற காவிரி போல் பெரும் கம்பீரத்துடன் எல்லா வளத்தையும் மக்களுக்கு அளிப்பது போல்  கல்வியில் நீங்கள்  எல்லா வளத்தையும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்.


கரூர் மாவட்டம் மாயனூர் கரூர் அரசு மாதிரிப் பள்ளியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமதி.க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), திரு.இரா. மாணிக்கம் ( குளித்தலை), திரு. ஆர். இளங்கோ ஆகியோர்கள் முன்னிலை வைத்தார்கள்



பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் அரசு மாதிரி பள்ளியினை சென்ற வருடம் துவக்கி வைத்தார்கள். அதேபோல் இவ்வாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் செயல்படவுள்ளது.   மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இப்பள்ளியை துவக்கி வைப்பதன் காரணம்,  மாயனூர் என்ற  இடம் அகன்ற காவிரி பாயும் இந்த மண்ணில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் உகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இவ்விடம்  அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மாவட்டத்தின் மையப்புள்ளியாகவும், தேசிய நெடுஞ்சாலையில்  இருக்கிறது. மாணவர்கள் வந்து செல்ல வசதியாகவும் இருக்கும் ஆகவேதான் இவ்விடத்தை  நாங்கள் தேர்வு  செய்துள்ளோம். மாயனூர் ஆசிரியர் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த அதே இடத்தில் தேர்வு செய்து மாணவர்களுக்கு கல்வி அறிவை செலுத்துவதன் அடிப்படையில் இந்த மாதிரிப் பள்ளி இங்கே உருவாக்கப்பட்டுள்ளது.  இங்கே கட்டடம் கட்டுவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.2.25 கோடி மதிப்பில் நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்கள் அதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விடம் கல்விக் கற்றலுக்கு உகந்த பள்ளியாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இங்கே பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டடங்களை தயார்படுத்தி உள்ளோம்


 


 




 


 


 


இந்த மாதிரி பள்ளியில் கல்வியறிவில் சிறந்து விளங்க அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை தேர்வு செய்துள்ளோம்.  இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் தங்கும் விடுதிகள், சமையலறை, ஆய்வகங்கள், இணையதள வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், நூலக வசதி, மாதிரி பள்ளிகளுக்கான சிறப்பு வாய்ந்த ஆசிரியர்கள், விடுதியினை கண்காணிக்க விடுதி காப்பாளர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளது. இங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை. இந்த மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உங்கள் இலக்கை உயரிய நிலையில் வைத்து படிக்க வேண்டும் கல்வி கற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளை ஆசிரியர்கள் வழங்குவார்கள்.


மேலும்,  யோகா, வேலைவாய்ப்புகளுக்கான திறன் பயிற்சியும், ஓவியம் பயிற்சி போன்ற நற்பண்புகளை கற்றுக் கொடுக்கப்படும்.  இங்கே பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஒரே வேண்டுகோள் அடுத்த வருடம் இங்கே பயிலக்கூடிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரியில் அதிக  அளவில் சேர வேண்டும். அவ்வாறு சேர்வதற்கான பயிற்சிகளை நீங்கள் இப்பொழுதே தயார் படுத்திக் கொள்ள முன் வரவேண்டும் . இந்த மாதிரி பள்ளியில். பள்ளிப்படிப்பு முடித்து வெளியேறும் போது பல்வித நற்பண்புகளை பெற்றிருக்க வேண்டும். கல்வி கற்க வேண்டிய நேரத்தில் கல்வியையும், விளையாடும் நேரத்தில் விளையாட்டுகளையும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.  கல்வியை சுமையாக கருதாமல் ரசித்து விரும்பி படிக்க வேண்டும். நீங்கள் அகன்ற காவேரி எப்படி கம்பீரத்துடன் மக்களின் வாழ்க்கை வளத்தை தருவது போல் மாணவர்களாகிய நீங்கள் கல்வி வளத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு பாட நூல்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.


 


 


 




 


இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. சுமித்ரா தேவி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .சுமதி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் (பொ). திரு. கருணாகரன், தனித்துணை ஆட்சியர்(சபாதி)திரு.சைபுதீன். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு. சண்முக வடிவேல், மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. தீனதயாள், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் திருமதி.விஜயலட்சுமி மற்றும் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.