தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று முன் தினம் (ஜூலை 17) பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது.


காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களைத் தூக்கிச் சென்றனர். 


இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர்.


இதனிடையே தனியார் பள்ளியில் தாக்குதல் நடந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நேற்று முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி இருந்தது. இதை முன்னிட்டு நேற்றைய தினம்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் போவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக அறிவிக்கப்பட்டது. எனினும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. 




இதற்கிடையே நேற்று மாநிலம் முழுவதும் 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதையடுத்து தமிழக அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு 987 தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும். பள்ளிகளின் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மதுரையில் பெரும்பான்மையான  தனியார் பள்ளிகள் இயங்கிய நிலையில் 7 பள்ளிகள் மட்டும் விடுமுறை அளித்திருந்தன. இந்த 7 பள்ளிகளுக்கும் விளக்கம் அளிக்க கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண