8ஆம் வகுப்பு பள்ளி பாடப் புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2021-ல் தமிழக சட்டப்பேரவையில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் கொண்டு வரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். அதையடுத்து 9ஆம் வகுப்பு புத்தகத்தில், செம்மொழி நிலை, தமிழ்மொழிக்குக் கிடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பாடம் சேர்க்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இந்த பாடம் சேர்க்கப்பட்டு, வழங்கப்பட்டது.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழியான தமிழ் மொழியே பாடல் மட்டும் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த நிலையில், 9ஆம் வகுப்புப் பாடப்புத்தக்கத்தில் முதல்முறையாக அவர் குறித்த பாடம் இடம் பெற்றது.
பன்முகக் கலைஞர்
தொடர்ந்து தற்போது 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது. வரும் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞர் குறித்த பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில், குடிமையியல் பாடத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வருவதற்கு, அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டத்தில், பெண் உரிமை சட்டங்கள்: "இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்த இயக்கங்களின் பயனாக ஆண்களுக்கு இணையாக பெண்களையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு சட்டரீதியான ஓர் உரிமை மறுக்கப்படும்போது, அதற்குத் தீர்வு வேண்டி அவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலும். எனவே, பெண்ணுரிமையில் சட்டமியற்றலின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்திய அளவில் இயற்றப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்கி வருகின்றன. சதி ஒழிப்புச்சட்டம் 1829-இன் படி, கணவன் இறந்த பிறகு மனைவியை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் (சாரதா சட்டம்) 1929-இன் படி, பெண் பிள்ளைகளை இளம் வயதில் திருமணம் செய்துவைக்கும் வழக்கமும் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டன. விதவை மறுமணச் சட்டம் 1856-இன் படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டனர். 1958இல் இயற்றப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டமானது, பெற்றோர்களின் சொத்தில் மகளுக்குச் சொத்துரிமையை உறுதி செய்தது.
எனினும், இச்சட்டம் இயற்றப்பட்டபோது கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண் வாரிசுகளுக்கான உரிமை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையானது வரதட்சணை என்னும் கொடிய வழக்கம் நீடிப்பதற்கும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கூட்டுக் குடும்ப சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காக, 1956-இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்தமானது இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டம் 1989 என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தமிழ்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கு 1989இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.