மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வுக்கு சர்வர் பிரச்சினையால் விண்ணப்பிக்க முடியவில்லை என்றும், விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
விண்ணப்பங்களைத் திருத்த அவகாசம்
ஆண்டுதோறும் இந்தத் தேர்வு 2 முறை நடத்தப்படும் நிலையில், நுழைவுத் தேர்வுக்கு தேர்வர்கள் பிப்ரவரி 25ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். தொடர்ந்து விண்ணப்பப் படிவங்களில் திருத்தம் செய்ய பிப்ரவரி 27 முதல் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் பிப்.28 நள்ளிரவு 11.50 வரை திருத்தம் செய்யலாம்.
இதுதொடர்பான விவரங்கள் https://cdnbbsr.s3waas.gov.in/s3f8e59f4b2fe7c5705bf878bbd494ccdf/uploads/2025/02/2025022442.pdf என்ற அறிவிக்கையில் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விண்ணப்பிக்க நேற்று கடைசி தினத்தில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வர் முறையாக இயங்கவில்லை
இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ’’IIT - JEE Mains நேற்று கடைசி நாள் என்பதால் பெருமளவில் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில் முயற்சித்ததால் சர்வர் முறையாக இயங்கவில்லை. பலரும் விண்ணப்பிக்க இயலவில்லை.
ஆகவே விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை இன்னும் இரண்டு நாள் நீட்டிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
12 மொழிகளில் தேர்வு எழுதலாம்
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய 12 மொழிகளில் JEE Main நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/