கழிப்பறை சென்று திரும்பும் ஜேஇஇ தேர்வர்களுக்கு மீண்டும் பயோமெட்ரிக் மற்றும் உடல் சோதனை நடத்தப்படும் என்று என்டிஏ அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை பிற தேர்வுகளுக்கும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு, அவர்கள் உள்ளே நுழையும்போது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு மற்றும் உடலில் ஏதேனும் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறியும் பரிசோதனை ஆகியவை நடத்தப்படுகிறது. இந்த நடைமுறை இனி கழிப்பறை சென்று திரும்பும் தேர்வர்களுக்கும் நடத்தப்பட உள்ளது.
மோசடி செய்வதைத் தவிர்க்கவே...!
இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை இயக்குநர் சுபோத் குமார் சிங் கூறும்போது, ’’முறைகேடுகள் மற்றும் வருகைப் பதிவேட்டில் மோசடி ( biometric attendance ) செய்வதைத் தவிர்க்கும் வகையில், இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ளே நுழையும்போது பரிசோதனைகள் செய்யப்படும் நிலையில், முறைகேடே இல்லாத நிலையை உறுதிசெய்ய இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய விதிமுறைகள், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வுடன் தொடர்புடைய பிறருக்கும் பொருந்தும். வருங்காலத்தில் பிற தேர்வுகளுக்கும் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது ’’ என்று தேசியத் தேர்வுகள் முகமை இயக்குநர் சுபோத் குமார் சிங் தெரிவித்தார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.
12 மொழிகளில் தேர்வு எழுதலாம்
JEE Main நுழைவுத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய 12 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?
2024ஆம் ஆண்டுக்கான முதல் அமர்வுக்கான தேர்வின் முதல் தாள் Paper 1 (BE/BTech) ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் தாள் (BArch and BPlanning) ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது.
ஜனவரி மாத JEE Main தேர்வுக்கு 12.3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடைபெறும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/