மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் இன்று (ஜன.24) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளன.


2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் இன்று (ஜன.24) தொடங்கி உள்ளன. குறிப்பாக தாள் 2ஏ மற்றும் தாள் 2பி ஆகியவற்றுக்கான தேர்வுகள் இன்று நடைபெறுகின்றன. காலை 9 முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.


இதில் தாள் 2 ஏ தேர்வுகள், தாள் 2பி-ல், பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் தேர்வுகள் மதியம் 3 முதல் 6 மணி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகள் தொடர்ந்து, ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.


தேர்வு எப்படி?


தாள் 2ஏ தேர்வுகள் இரண்டு முறைகளில் நடைபெறுகின்றன. கணிதம் மற்றும் திறன் சார்ந்த தேர்வுகள் கணினி மூலமாகவும் ட்ராயிங் தேர்வுகள் பேனா- காகித முறையிலும் நடைபெறுகின்றன.


என்னென்ன ஆவணங்கள் அவசியம்?


ஜேஇஇ தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் அவசியம். அவை குறித்துக் காணலாம்.


* JEE Main 2024 அனுமதிச் சீட்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.


* சுய உறுதிமொழிப் படிவம்


* விண்ணப்பத்தில் உள்ளது போன்றே பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.


* அசல் அடையாள அட்டை (பள்ளி அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என எதுவாகவும் இருக்கலாம்.


* கறுப்பு அல்லது நீல பால் பாயிண்ட் பேனா,


* வண்ணப் பூச்சுகள் இல்லாத தண்ணீர் பாட்டில்


ஆகியவற்றைத் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லலாம்.


விடைக் குறிப்புகள்


தற்காலிக விடைக் குறிப்புகள் எப்போது வெளியாகும் என்று விரைவில் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இதில் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 தொகை, செலுத்த வேண்டும். இந்தப் பணம் திருப்பித் தர மாட்டப்படாது.


2 முதல் 3 நாட்களுக்கு தற்காலிக விடைக் குறிப்புகள் காண்பிக்கப்படும். தேர்வர்களின் ஆட்சேபணைகளைப் பரிசீலித்து, இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்படும்.  


உரிய காரணங்கள், விளக்கங்கள், ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்படும் ஆட்சேபணைகள் கருத்தில் கொள்ளப்படாது. பாட வல்லுநர்கள், தேர்வர்களின் ஆட்சேபணைகளைத் தீர ஆலோசித்து, இறுதி பாடக் குறிப்பை வெளியிடுவர்.


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/