ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வின் 2ஆவது அமர்வுக்கான தேர்வு மைய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.


நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களாக அறியப்படுகின்றன. இங்கு கற்பிக்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.


முதல் அமர்வு எப்போது நடந்தது?


2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜனவரி 24ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வுகள் ஜனவரி 27, 29, 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. நாடு முழுவதும் 291 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 21 நகரங்களிலும் தேர்வுகள் நடைபெற்றன.


இந்த நிலையில், ஜேஇஇ 2ஆம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் இரு ஷிஃப்டுகளில் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடைபெறுகிறது.


இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு பிப்.3-ல் தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு மையங்கள் எந்த எந்த நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்னும் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.


இதைக் காண்பது எப்படி?


* தேர்வர்கள் jeemain.nta.ac.in என்ற இணைப்பை க்ளிக் செய்துகொள்ளவும்.


* முகப்புப் பக்கத்தில் தோன்றும், "JEE(Main) 2024 : City Intimation for Session- 2"  என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.


* புதிய பக்கம் ஒன்று தோன்றும்.


* அதில், உங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, படிப்பு ஆகிய விவரங்களை உள்ளீடு செய்யவும்.


* உங்களுடைய ஜேஇஇ மெயின் தேர்வுக்கான தேர்வு மைய விவரம் (Your JEE Main 2024 exam city slip) திரையில் தோன்றும்.


* அதைப் பதிவிறக்கம் செய்து, வருங்காலப் பயன்பாட்டுக்காக வைத்துக்கொள்ளவும்.


எனினும் இதுதான் ஹால்டிக்கெட் என்று மாணவர்கள் குழப்பம் கொள்ள வேண்டாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://jeemain.nta.nic.in/


தொலைபேசி எண்: 011- 40759000 


இ- மெயில்: jeemain@nta.ac.in