ஐஐடிக்களில் பொறியியல் படிப்பில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று (ஜூன் 9) வெளியாகியுள்ளன. இதில் ஐஐடி டெல்லி பகுதி மாணவர் வேத் லகோத்தி முதலிடம் பெற்றுள்ளார். இதற்கிடையே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்ஸ்), முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என்று 2 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது.


மெயின்ஸ் தேர்வில் வென்றால், அட்வான்ஸ்டு தேர்வு


ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.


இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. இவை தாண்டிய பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதலாம்.


இந்த நிலையில், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு, 1,86,067 இந்தியர்களும் 169 வெளிநாட்டவர்களும் விண்ணப்பித்தனர். இதில், 1,79,711 இந்தியர்களும் 158 வெளிநாட்டவரும் இரண்டு தாள்களையும் எழுதினர்.


1.80 லட்சம் பேர் கலந்துகொண்ட தேர்வு


ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில் மொத்தம் 180,200 பேர் இரு தாள்களையும் எழுதினர். இதில், 7,964 மாணவிகள் உட்பட 48,248 பேர் தேர்வாகி உள்ளனர். இதில், 48,062 இந்தியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7 வெளிநாட்டவர் தேர்வாகி உள்ளனர்.




ஐஐடி டெல்லி பகுதி மாணவர் முதலிடம்


தேர்வு முடிவில் ஐஐடி டெல்லி பகுதி மாணவர் வேத் லகோத்தி முதலிடம் பெற்றுள்ளார். இவர் 360 மதிப்பெண்களுக்கு 355 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். போகல்பள்ளி சந்தேஷ் என்னும் ஐஐடி சென்னை பகுதி மாணவர், 338 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார். ஐஐடி மும்பை பகுதியைச் சேர்ந்த த்விஜா தர்மேஷ்குமார் படேல் மாணவிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் 360-க்கு 332 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.  


இதற்கிடையே ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.


* மாணவர்கள் https://jeeadv.nic.in/ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.


* அதில், https://results1.jeeadv.ac.in/  அல்லது https://results2.jeeadv.ac.in/ அல்லது https://results3.jeeadv.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


* அதில் பதிவு எண், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


கூடுதல் தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2023653


இதையும் வாசிக்கலாம்: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?