பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசித் தேதி ஆகும்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட் 11) கடைசித் தேதி ஆகும். இன்று மாலை 5 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 23 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம்.
தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு குறித்த முழுமையான கால அட்டவணையை https://jeeadv.ac.in/schedule.html என்ற இணைய முகவரி மூலம் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
ஜேஇஇ மெயின் தேர்வின் தரவரிசையின் அடிப்படையில் இந்திய தொழில்நுட்பக் கழகங்களுக்கான (IIT's) மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்