ஆசிரியர்‌ பற்றாக்குறையால்‌ தேர்வு நேரத்தில்‌ பரிதவிக்கும்‌ மாணவச்‌ செல்வங்கள்‌: விடியா திமுக அரசுக்கு கண்டனம்‌ என்று எதிர்க் கட்சித் தலைவர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ ஆட்சிக்‌ காலம்‌ முழுவதும்‌ உரிய முறையில்‌தமிழக மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதிப்பதையே தலையாய கடமையாகக்‌ கொண்டு செயல்பட்டோம்‌. கடந்த 2021-ல்‌ ஆட்சிக்கு வந்த திமுக அரசாங்கம்‌, பல்வேறு வகைகளில்‌ கல்வித்துறையை சீரழித்து வருவதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.


தமிழ்‌நாட்டில்‌ அதிமுக‌ அரசு இருக்கும்போது, துறைகள்தோறும்‌ ஏற்படும்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ அவ்வப்போது நிரப்பப்பட்டு வந்தன. குறிப்பாக மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை, கல்வித்‌ துறை மற்றும்‌ காவல்‌ துறையில்‌ பணியிடங்கள்‌ முழுமையாக நிரப்பப்படுவதை அதிமுக அரசு‌ உறுதி செய்தது.


வரலாற்றுச்‌ சாதனை


குறிப்பாக 2012-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா‌, சுமார்‌ 20,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியது இன்றளவும்‌ வரலாற்றுச்‌ சாதனையாக உள்ளது.


ஆனால்‌, 2021-ல்‌ ஸ்டாலினின்‌ திமுக அரசு பதவியேற்றதில்‌ இருந்து துறைகள்தோறும்‌ காலிப்‌ பணியிடங்கள்‌ அதிகரித்துள்ளன. மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை மற்றும்‌ கல்வித்‌ துறையில்‌ ஆயிரக்கணக்கான பணியிடங்கள்‌ காலியாக உள்ளன என்றும்‌ அவற்றை உடனடியாக நிரப்பிடக்‌ கோரி பலமுறை நான்‌ இந்த அரசை வலியுறுத்தி இருக்கிறேன்‌.


அனைத்துத்‌ தரப்பு சங்கங்களும்‌ வலியுறுத்தல்


அரசு ஊழியர்‌ சங்கங்கள்‌, ஆசிரியர்‌ சங்கங்கள்‌ உள்ளிட்ட அனைத்துத்‌ தரப்பு சங்கங்களும்‌ உடனடியாக காலிப்‌ பணியிடங்களை நிரப்ப ஸ்டாலினின்‌ விடியா திமுக அரசை வலியுறுத்தி வருகின்றன.


5,154 தற்காலிகப்‌ பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து, அதன்‌ மூலம்‌ மாணவர்‌ கற்றல்‌ நலன்‌ பாதுகாக்கப்படுவதாக திமுக அரசு தெரிவித்துள்ளதாகச்‌செய்திகள்‌ வந்துள்ளன. ஆனால்‌, இந்த அரசு 2024-ம்‌ ஆண்டு, BT/ BRTE பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடம்‌ 3,192 என்று விளம்பரம்‌ செய்து அதற்காக நியமனத்‌ தேர்வு நடத்தியது.


தற்போது இதில்‌ பல பணியிடங்களை குறைத்து சுமார்‌ 2,803 பணியிடங்களுக்கு மட்டுமே சான்றிதழ்‌ சரிபார்ப்பு நடந்துள்ளதாகத்‌ தேவு எழுதிய ஆசிரியர்கள்‌  வேதனையுடன்‌ தெரிவித்துள்ளதாகச்‌ செய்திகள்‌ வந்துள்ளன. எனவே, இந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில்‌ இருந்து 5,154 காலிப்‌ பணியிடங்களையும்‌ நிரப்ப ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு எழுதியுள்ளவர்கள்‌ கோரிக்கை விடுத்துள்ளனர்‌.


போதுமான அளவு ஆசிரியர்கள்‌ இல்லை


பள்ளிகளில்‌ காலியாக உள்ள ஆசிரியர பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்படுபவர்கள்‌ பெற்றோர்‌ சங்கம்‌ மற்றும்‌ தலைமையாசிரியா மூலம்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌. அவ்வாறு பட்டதாரி ஆசிரியா்‌ பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களின்‌ பணிக்காலம்‌ மார்ச்‌ மாதத்துடன்‌ முடிவடைவதாகவும்‌, அதுபோலவே, தற்காலிக முதுகலை ஆசிரியர்களின்‌ பணிக்காலம்‌ பிப்ரவரி மாதத்துடன்‌ முடிவடைவதாகவும்‌, இதனால்‌, அரசின்‌ பொதுத்‌ தேர்வுகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர்‌ பணிக்கு போதுமான அளவு ஆசிரியர்கள்‌ இருப்பதில்லை என்று தெரிகிறது.


10 மற்றும்‌ 12 வகுப்பு மாணவர்கள்‌ தேர்வு எழுதுவதற்கு முன்‌ அவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய தற்காலிக ஆசிரியாகள்‌ முன்னதாகவே பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால்‌ தேர்வு எழுதும்‌ மாணவர்கள்‌ பெரிதும்‌ பாதிக்கப்படுவார்கள்‌ என்று ஆசிரியர்‌ சங்க நிர்வாகிகள்‌ தெரிவிக்கின்றனர்‌.


இதுமட்டுமல்லாமல்‌, தற்காலிகமாக நியமிக்கப்படும்‌ ஆசிரியர்களில்‌ பலர்‌ பாடம்‌ நடத்துவதற்கான ஆசிரியர்‌ (B.Ed.,) கல்வித்‌ தகுதி பெறாத, சாதாரண பட்டதாரிகளாக உள்ளதாகவும்‌, இதனால்‌ மாணவர்களின்‌ கல்வித்‌ தரம்‌ குறைவதாகவும்‌ செய்திகள்‌ தெரிவிக்கின்றன.


5,154 பணியிடங்களையும் நிரப்புக


எனவே, இனியாவது பள்ளிக்‌ கல்வித்‌ துறைக்கு பொறுப்பு வகிக்கும்‌ அமைச்சர்‌, இந்த ஆண்டு (2024) BT/ BRTE  பட்டதாரி ஆசிரியா்‌ பணியிடங்களுக்குத்‌ தேர்வு எழுதியவர்களில்‌ இருந்தே, காலியாக உள்ள 5,154 பணியிடங்களுக்கும்‌ முழுமையாக நிரப்பிட வேண்டும்‌ என்றும்‌; இதுவரை தேர்வு நடத்திடாத மற்ற ஆசிரியா்‌ பணியிடங்களுக்கும்‌ உடனடியாகத்‌ தேவு நடத்தி காலியாக உள்ள அனைத்து ஆசிரியா்‌ பணியிடங்களையும்‌ நிரப்பிட வேண்டும்‌ என்றும்‌ திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’‌.


இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.