அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ- ஜியோ ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழக அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சர்கள் குழு, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தையானது ஒன்றரை நேரம் நடைபெற்றது. முன்னதாக, இன்றைய கூட்டத்திற்கு தலைமை ஏற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கு.வெங்கடேசன், இரா.தாஸ், கு.தியாகராஜன் ஆகியோர் மூன்று அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மைச்சர்கள் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் தொடர்பான விரிவான தயாரிப்போடு கலந்து கொண்டனர். ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்துப் பேசியதையும் மாண்புமிகு அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சரின் பேச்சால், ஆசிரியர் - அரசு ஊழியர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து, தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான பணிப் பாதுகாப்பு சட்டம், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இப்பேச்சு வார்த்தையின் முடிவில், தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தமிழக முதலமைச்சரைச் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர்.
இதன் பின்னர், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி, தமிழக முதலமைச்சர் ஆசிரியர் - அரசு ஊழியர்களின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததற்கும் அமைச்சர்கள் குழு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும், நல்லெண்ண நடவடிக்கையாக ஏப்ரல் 11 கோட்டை முற்றுகை போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தொடர்புடைய செய்திகள்: Jactto - Geo : ஏப்ரல் 11-ல் கோட்டை முற்றுகை போராட்டம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு