ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, 10 அம்சக் கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அறைகூவல் விடுத்துள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி, லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 06 முதல் இந்த வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

டிசம்பர் 15 முதல் 19 வரை - வட்டார அளவில் பிரச்சார இயக்கம்

Continues below advertisement

டிசம்பர் 27 மாவட்டத்  தலைநகரில் - காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

என்னென்ன 10 அம்சக் கோரிக்கைகள்?

01.04.2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உடன் அமல்படுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை காரணம் காட்டி 23.08 2010க்கு முன்னதாகப் பணி ஏற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து (TET) தேர்விலிருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண்: 243 நாள்: 21.12.2023 மற்றும் ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையில் அரசாணை 75, நாள்: 30.09.2024 ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழல்நுட்ப ஊழியர்கள் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு (CAS), பேராசிரியர் பணி மேம்பாடு, ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய PPP & COE ஊழியர்கள் பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் 30%க்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்கிட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: WP.No.24797/2015 தீர்ப்புநாள் 23.10.2024-ன்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.