பழைய ஓய்வூதியத்‌ திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இல்லையெனில் நவம்பர் 1 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.


இதுகுறித்து  ஜாக்டோ ஜியோ தெரிவித்து உள்ளதாவது:


’’இந்தியாவில்‌ நான்கு மாநிலங்கள்‌ புதிய ஓய்வூதியத்‌ திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதியத்‌ திட்டத்திற்கு திரும்புவதாக தெரிவித்த பிறகும்கூட பழைய ஓய்வூதியத்திட்டத்தை தேர்தல்‌ அறிக்கையில்‌ சொன்னபடி அமல்படுத்தாமல்‌ இருப்பது ஆசிரியர்களையும்‌ அரசு ஊழியர்களையும்‌, பணியாளர்களையும்‌ பெருத்த அதிர்ச்சியில்‌ ஆழ்த்தியுள்ளது. 


முதல்வரின்‌ வாக்குறுதிகள்‌ மீதான நம்பிக்கைகள்‌ மெல்லத்‌ தகர்ந்து வரும்‌ சூழ்நிலையில்‌ நாங்கள்‌ எங்கள்‌ வாழ்வாதார கோரிக்கைகளை ஜனநாயகம்‌ அனுமதித்துள்‌ள போராட்டங்கள்‌ மூலம்‌ வென்றெடுக்க வேண்டிய முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத்‌ தள்ளப்பட்டுள்ளோம்‌. ஜாக்டோ ஜியோ அமைப்பின்‌ போராட்டக்குழு அறிவித்துள்ள இயக்கங்களை நடத்திடுவதற்கு நாங்கள்‌ ஆயத்தமாகி வருகிறோம்‌.


தொடர் போராட்டம்


நவம்பர்‌ 1 மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌
நவம்பர்‌ 15 முதல்‌ நவம்பர்‌ 24 வரை ஆசிரியர்‌ -அரசு ஊழியர்‌ - அரசுப்‌ பணியாளர்‌ சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம்‌.
நவம்பர்‌ 25 மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மறியல்‌ போராட்டம்‌.
டிசம்பர்‌ 28 லட்சக்கணக்கான ஆசிரியா-அரசு ஊழியா்‌- அரசுப்பணியாளர்‌ பங்கேற்கும்‌ கோட்டை முற்றுகைப்‌ போராட்டம்‌


கடந்த இருபது ஆண்டுகளாக தீர்க்கப்படாமல்‌ உள்ள எங்கள்‌ கோரிக்கைகள்‌, குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர்‌ பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலுவையில்‌ உள்ள கோரிக்கைகள்‌:


1.4.2003க்குப்‌ பிறகு அரசுப்பணியில்‌ சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்‌ பங்களிப்புடன்‌ கூடிய ஓய்வூதியத்‌ திட்டத்தினைக்‌ கைவிட்டு, பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்‌.


சரண்விடுப்பு ஒப்படைப்பு


2. காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர்‌ கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்‌.


3. இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்‌களுக்கு, உடற்கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம்‌ வழங்கப்படாமல்‌ இழைக்கப்பட்டு வரும்‌ அநீதி களையப்பட வேண்டும்‌.


4. முதுநிலை ஆசிரியர்கள்‌, அனைத்து ஆசிரியர்கள்‌, அரசு ஊழியர்கள்‌, அரசுப்‌ பணியாளர்கள்‌, கண்காணிப்பாளர்கள்‌, தலைமைச்‌ செயலகம்‌ உள்ளிட்ட அரசு அலுவலர்கள்‌, களப்பணியாளர்கள்‌, பல்வேறு துறைகளில்‌ உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள்‌, ஊர்தி ஓட்டுநர்கள்‌, ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக்‌ களைய வேண்டும்‌. கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும்‌. உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்‌.


5. சிறப்பு காலமுறை ஊதியம்‌ பெற்றுவரும்‌ சத்துணவு, அங்கன்வாடி வருவாய்‌ கிராம உதவியாளர்கள்‌,ஊராட்சி செயலாளர்கள்‌, ஊர்ப்புற நூலகர்கள்‌, கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ துப்புரவுப்‌ பணியாளர்கள்‌, தொகுப்பூதியத்தில்‌ பணியாற்றும்‌ செவிலியர்கள்‌, சிறப்பு ஆசிரியர்கள்‌, பல்நோக்கு மருத்துவமனைப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம்‌ வழங்கிட வேண்டும்‌. மேலும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ பணியாளர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ பகுதிநேர ஆசிரியர்கள்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்பட வேண்டும்‌.


காலிப் பணியிடங்களை நிரப்புக


6. அரசின்‌ பல்வேறு துறைகளில்‌ 3௦ விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்‌.


7. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்‌ தொகை அரசு ஊழியர்கள்‌- ஆசிரியர்கள்‌ - அரசுப்‌ பணியாளர்கள்‌ ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்‌.


8. 2003 முதல்‌ 2004 வரை தொகுப்பூதியத்தில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட ஆசிரியர்கள்‌ அரசு ஊழியர்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பணியாளர்களின்‌ பணிக்‌ காலத்தினை அவர்கள்‌ பணியில்‌ சேர்ந்த நாள்‌ முதல்‌ பணி வரன்முறைப்படுத்தி ஊதியம்‌ வழங்கிட வேண்டும்‌


9. சாலைப் பணியாளர்களின்‌ 41 மாத பணி நீக்கக்‌ காலத்தினை முறைப்படுத்த வேண்டும்‌.


10. உள்ளாட்சி அமைப்புகளிலும்‌ பல்வேறு அரசுத்துறைகளிலும்‌ தனியார்‌ முகமை மூலம்‌ பணியாளர்களை நியமனம்‌ செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்‌.


எனவே தமிழ்நாடு முதல்வர்‌  ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை/ போராட்டக்‌ குழுவினரை உடனடியாக அழைத்து வாழ்வாதார கோரிக்கைகள்‌ சார்ந்தாவது பேசி முடிவெடுத்து அறிவிப்புகள்‌ வெளியிடக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌’’.


இவ்வாறு  ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.