நவம்பர் 1ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தொடர் போராட்டம்
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
முதலில் ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
திடீர் வாபஸ்
தொடர்ந்து ஒவ்வொரு சங்கங்களாக போராட்டத்தை வாபஸ் பெற்றன.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு கூட்ட இன்று திருச்சியில் நடைபெற்றது இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்டோபர் 28 - மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்புக் கூட்டம்
நவம்பர் 1 - மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம்
நவம்பர் 15 முதல் 24 வரை - அரசு ஊழியர் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்
நவம்பர் 25 - மாவட்டங்களில் மறியல்
டிசம்பர் 28 - கோட்டை முற்றுகை.
இவ்வாறு ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
3 சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது, மீண்டும் மீண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.