புதுச்சேரி: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான இறுதி காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுகிறது. சான்றிதழ்களுடன் முதலில் வருபவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Continues below advertisement

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை நாளையுடன் நிறைவு  

புதுச்சேரி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) 2025–2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், சேர்க்கைக்கான இறுதி நாளாகிய செப்டம்பர் 30ஆம் தேதி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால், இன்னும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

குறைந்த அளவிலான இடங்கள் 

மொத்தம் 1148 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 712 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  

Continues below advertisement

அதிகாரியின் தகவல்  

புதுச்சேரி தொழிலாளர் துறையின் பயிற்சி பிரிவி உதவி இயக்குநர் சரவணன் கூறுகையில்:  

“இந்த ஆண்டிற்கான ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை நாளை 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள மாணவர்கள் இன்று மற்றும் நாளை தவறாமல் தங்கள் சான்றிதழ்களுடன் அருகிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்,” என்றார்.  

 

புதுச்சேரியில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம் (பெண்கள் மட்டும்), வில்லியனூர், நெட்டப்பாக்கம், பாகூர் பகுதிகளில் அரசு ஐ.டி.ஐ.,கள் செயல்படுகின்றன. காரைக்காலில் திருமலைராயன்பட்டினம் பகுதியில் மாணவர்களுக்கும் மாணவியருக்கும் தனித்தனி தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதேபோல், மாகேவில் கிழக்கு பள்ளூரிலும், ஏனாமிலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  

தொழில் படிப்புகள்  

இந்த ஆண்டில் பல துறைகளில் தொழில் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. அவை:  

  • டிரோன் டெக்னிஷியன்  
  • மின்சார வாகன மெக்கானிக்  
  • சோலார் பேனல் பொருத்துபவர்  
  • எலெக்ட்ரீஷியன்  
  • கம்ப்யூட்டர் ஆபரேடர்  
  • பிட்டர்  
  • ஒயர்மேன்  
  • குளிர்சாதன டெக்னிஷியன்  
  • மேசன்  
  • வெல்டர்  
  • சமையல் கலை  
  • கட்டடப் பட வரைவாளர்  
  • தையல் தொழில்நுட்பம்  
  • அழகுக்கலை  
  • மோட்டார் வாகன மெக்கானிக்  

வழங்கப்படும் சலுகைகள்  

புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ., பயிற்சிகளில் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சலுகைகளை பெறவுள்ளனர்.

பெண்கள் மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

உதவித்தொகை: மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை அளிக்கப்படும்.  

புத்தகங்கள் :

தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.  

பிரிவு முதலிடம்:

ஒவ்வொரு தொழில் பிரிவிலும் தகுதித் தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு கூடுதலாக ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.  

சேர்வதற்கான இடங்கள் வரையறுக்கப் பட்டுள்ளதால், ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை அணுக வேண்டியது அவசியம்.